இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு அளிக்கப்படும் ஹெச்.2-பி விசா நடைமுறைகள் ஒழுங்குபடுத்துவதை தாம் ஆதரிப்பதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வேளாண் துறை அல்லாத மற்ற துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் துறைகளில் ஏற்படும் பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்க, வெளிநாடுகளில் இருந்து ஹெச்.2-பி விசா மூலம் குறிப்பிட்ட காலத்துக்கு தற்காலிகமாக ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இந்த விசா நடைமுறையை சிலர் தவறாகப் பயன்படுத்தத் தொடங்கியதை அடுத்து, ஹெச்.2-பி விசா பெறுவதற்கான நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டன. இதன்படி ஹெச் 2-பி விசா கட்டணத்தை 3,500 அமெரிக்க டாலரில் இருந்து 5,000 அமெரிக்க டாலராக உயர்த்தும் திட்டம் உள்ளிட்ட கெடுபிடிகள் கொண்டு வரப்பட்டன.
இதனால் இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர். ஹெச்.2-பி விசா வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என்றும், அதற்கான நடைமுறைகளை எளிதாக்க வேண்டும் என்றும் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் அரசை வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், ஹெச்.2-பி விசா நடைமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் பராக் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார்.
பெனின்சுலா மாகாணம் துர்யியா என்ற இடத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், உள்நாட்டில் அமெரிக்க மென்பொருள் பொறியாளர்கள் இருந்தபோதும், அவர்களுக்கு அளிக்க வேண்டிய ஊதியத்தைவிட வெளிநாட்டவர்களுக்கான ஊதியம் மிகவும் குறைவாக இருப்பதை சுட்டிக் காட்டினார்.
அமெரிக்காவில் சில துறைகளுக்கான பணிகளுக்கு வெளிநாட்டினர் பொருந்துவதால், பணி விசா நடைமுறைகளை மாற்றியமைக்கலாம் என்றார் அவர்.
எனினும் இதனால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகள் பாதிக்காதவாறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.