பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள +2 தேர்வுக்கு 30-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
மார்ச் மாதம் நடந்து முடிந்த +2 பொதுத் தேர்வில் 3க்கும் அதிகமான பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள் அக்டோபரில் மறு தேர்வு எழுதுவதற்காக வரும் 30ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.
முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், அரசு தேர்வு மண்டல இணை மற்றும் துணை இயக்குனர் அலுவலகங்கள் ஆகியவற்றில் விண்ணப்பங்கள் கிடைக்கும்.
தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க எச்.வகை விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும்.
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 2 ஆண்டு இடை வெளியும் 1-9-2007அன்று 16 வயது நிரம்பியவர்கள் எச்.பி.வகை விண்ணப்பத்தை பயன்படுத்தலாம்.
2005-2006ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த புதிய பாடத் திட்டத்தின் படி தான் தேர்வு நடைபெறும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை ரிஜிஸ்டர் தபாலில் மட்டுமே அந்தந்த பகுதியில் உள்ள அரசு தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும். விண்ணப்பம் கிடைக்க கடைசி நாள் ஆகஸ்டு 4-ந்தேதி.
இந்த தகவலை அரசு தேர்வு இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்தார்.