6,000 மாதிரி பள்ளிகள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்!
வியாழன், 6 நவம்பர் 2008 (17:49 IST)
நாட்டின் பின் தங்கிய பகுதியில் 6,000 மாதிரிப் பள்ளிகளை அமைக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு உதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக கல்வியில் பின்தங்கிய பகுதிகளில் 2,500 மாதிரி பள்ளிகள் அமைக்கப்படுகிறது. இப்பள்ளிகள் அந்தந்த மாநில அரசு வழியாக அமைக்கப்படுகிறது.
ஒரு மாதிரிப் பள்ளி உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் பெற்றிருக்கும். குறைந்தபட்சம் கேந்திரிய வித்யாலயாவின் தரத்தில் இருக்கும். இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக குறைந்தபட்சம் ஒவ்வொரு பின் தங்கிய பகுதியிலும் ஒரு நல்ல தரம் வாய்ந்த மேல்நிலைப் பள்ளி இருக்கும்.
இந்தப் பள்ளிகள் அமைப்பதற்கு நிலங்களை கண்டறிந்து அந்தந்த மாநில அரசுகள் இலவசமாக வழங்கும். எந்த மொழியில் பயிற்றுவிப்பது என்பதை மாநில அரசுகள் முடிவு செய்யும். இருப்பினும் ஆங்கிலம் கற்பித்தல், ஆங்கிலம் பேசும் பயிற்சி ஆகியவற்றுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.
இந்தப் பள்ளிகளில் 6 முதல் 12-வது வரையிலும் அல்லது 9 முதல் 12-வது வரையிலும் வகுப்புகள் இருக்கும்.
11-வது ஐந்தாண்டு திட்டத்தில் 2,500 மாதிரி பள்ளிகளை அமைப்பதற்கு ரூ.9,321 கோடி நிதி தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ.7,457 கோடி மத்திய அரசின் பங்காகும்.
இத்திட்டத்திற்கு திட்ட ஆணையம் ரூ.12,750 கோடி ஒதுக்கியுள்ளது. 2008-09ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் ரூ.650 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக மத்திய, மாநில அரசின் பங்காக 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் 75:25 என்ற விகிதத்திலும், 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 50:50 என்ற விகிதத்திலும் பங்கீட்டு வீதம் இருக்கும். எனினும், சிறப்பு பிரிவு மாநிலங்களுக்கு இந்த பங்கீட்டு வீதம் 90:10 என்ற விகிதத்தில் இருக்கும்.
இந்த திட்டம் நடப்பு நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இருப்பினும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள 6 மாநிலங்களில் தேர்தல் முடியும் வரை இத்திட்டம் செயல்படுத்தப்படமாட்டாது.