இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் எம்.பி.ஏ., பி.எட். படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு வரும் 17ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது என்று அப்பல்கலைக்கழக சென்னை மண்டல இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "எம்.பி.ஏ.வுக்கான நுழைவுத் தேர்வு 17ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரையும், பி.எட். நுழைவுத் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும் நடக்கிறது.
சென்னையில் அரும்பாக்கம் டி.டி.ஜி.டி. வைஷ்ணவா கல்லூரி, வேளச்சேரி குருநானக் கல்லூரி, திருநின்றவூர் ஜெயா கல்லூரி ஆகிய 3 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர திருப்பத்தூர், ஓசூர், நாமக்கல், வேலூர், புதுச்சேரி ஆகிய இடங்களிலும் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.
நுழைவுத் தேர்வுகளுக்கான அனுமதிச்சீட்டு (ஹால்டிக்கெட்) 'இக்னோ' டெல்லி அலுவலகத்தில் இருந்து அந்தந்த மாணவருக்கு நேரடியாக தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அனுமதிச்சீட்டு குறித்த விவரங்களை இக்னோ இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். அனுமதிச்சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் இணையதளத்தில் பிறந்த தேதி, பெயரை குறிப்பிட்டு நகல் எடுத்துக் கொள்ளலாம்.
இணைய தளம் மூலம் நுழைவுச்சீட்டு பெற முடியாதவர்கள், பல்கலைக்கழக மண்டல அலுவலகத்தை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்" என்று கூறப்பட்டுள்ளது.