கோவை வேளாண் பல்கலை.யில் உதவி பேராசிரியர்களை நியமிக்க தடை!
வெள்ளி, 25 ஜூலை 2008 (16:59 IST)
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்களை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக கோவை வேளாண் பல்கலைக்கழக ஆதிதிராவிடர்- பழங்குடியினர் ஊழியர் நலச்சங்க தலைவர் சந்திரசேகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பத்திரிகையில் விளம்பரம் வெளியிடப்பட்டது.
அந்த விளம்பரத்தில் எத்தனை காலியிடங்கள் உள்ளன என்ற விபரம் இல்லை. ஏற்கனவே ஆதிதிராவிடர்- பழங்குடியின பிரிவினருக்கு சேர வேண்டிய பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
அந்த இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடாமல், ஒட்டுமொத்தமாக உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதாக விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர்- பழங்குடியின பிரிவினருக்கு எத்தனை இடங்களை என்பதை அறிவித்த பிறகுதான், உதவி பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். அதுவரை உதவி பேராசிரியர் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும். என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பால் வசந்தகுமார் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கோவை வேளாண் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்து, அடுத்த கட்ட விசாரணையை 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
அன்றைய தினம் வேளாண் பல்கலைக்கழகத் துணை வேந்தர், பதிவாளர், ஆதிதிராவிடர் நலத் துறை செயலாளர், விவசாயத் துறை செயலாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.