சென்னை: கல்லூரிகளுக்கு முன் தேதியிட்டு அனுமதி வழங்கியதாகக் கூறி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக இளங்கோவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் 8 கல்லூரிகளுக்கு பி.எட், எம்.எட். படிப்பு தொடங்கவும், கூடுதலாக மாணவர்களை சேர்க்கவும், பல்கலைக்கழக சிண்டிகேட் முன்தேதியிட்டு அனுமதி வழங்கியதாகக் கூறியிருந்தார்.
இவ்வழக்கு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கல்லூரிகள் ஆகஸ்ட் 31-க்கு முன் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தால் அந்த ஆண்டிலேயே பல்கலைக்கழகம் அனுமதி தர வேண்டும்.
ஆகஸ்ட் 31-க்கு பிறகு வரும் விண்ணப்பங்களை பரிசீலித்து இணைப்பு வழங்க முடியுமா? என்பதை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் தான் தீர்மானிக்க வேண்டும்.
இதுதொடர்பாக ஏற்கனவே உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு உட்பட்டு பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. முன்தேதியிட்டு வழங்கியதாக இதனைக் கூறமுடியாது. எனவே மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.