சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும். இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.
சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.
நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள், இவற்றை போக்கும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும்.
சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், மூலக்கிருமி, மலத்துவாரத்தில் பூச்சுக்கடி போன்றவை நீங்கும்.