விஷவாயு தாக்கி 3-பேர் பலியான விவகாரம்.! வீடுகளில் உணவு சமைக்க தடை.!!

Senthil Velan

செவ்வாய், 11 ஜூன் 2024 (17:58 IST)
புதுச்சேரியில் விஷவாயுத்தாக்கி மூன்று பேர் பலியான நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக வீடுகளில் உணவு சமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் உள்ள  ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் வீட்டில் இருந்த மூதாட்டி செந்தாமரை ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அதனைத் தொடர்ந்து அவரை காப்பாற்ற சென்ற மகள் காமாட்சி, 15 வயது சிறுமி பாக்கியலட்சுமி ஆகியோர் மயக்கம் அடைந்தனர். 
 
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பாதாள சாக்கடையில் இருந்து விஷவாயு கழிவறை வழியாக வீட்டுக்குள் புகுந்ததாக முதலில் தகவல் வெளியானது. விஷவாயுவின் தன்மை குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. 
 
இதன் தொடர்ச்சியாக அங்கு ஆய்வு நடைபெற்ற நிலையில் பாதாளச் சாக்கடையில் விஷவாயு கசிவு இல்லை எனப் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார். வீட்டுக்குள் வேறு ஏதேனும் நடந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில் பாதிக்கப்பட்ட பகுதியில் புதுவை முதல்வர் ரங்கசாமி ஆய்வு செய்தார்.

மேலும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த 15 வயது சிறுமி பாக்கியலட்சுமியின் குடும்பத்தாருக்கு 30 லட்சம் நிதியுதவியும், மற்ற பெண்களான செந்தாமரை, காமாட்சி ஆகியோர் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாயும் நிதியுதவி அறிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க இரு குழுக்களை அமைத்து உத்தரவிட்டுள்ளார். 

ALSO READ: செய்தியாளர்களுக்கு செக்.! பிரஸ் மீட் இனி இங்கு கிடையாது.! அண்ணாமலை அதிரடி..!!
 
இந்நிலையில் இப்பகுதியில் மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக வீடுகளில் உணவு சமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் அரசு சார்பில் வீடு வீடாக சென்று உணவு விநியோகம் செய்யும் பணியும் நடைபெற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்