பூ வேண்டாம்.. புத்தகமே போதும்! – மு.க.ஸ்டாலின் ஸ்டைலில் சித்தராமையா!?

திங்கள், 22 மே 2023 (09:29 IST)
கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள சித்தராமையா தனக்கு பூங்கொத்துகள் வழங்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை வெற்றி பெற்ற நிலையில் சித்தராமயா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் பதவியேற்றுள்ளனர். இந்த பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

முதல்வராக பதவியேற்றுள்ள சித்தராமையாவின் அடுத்தடுத்த செயல்பாடுகள் என்னவாக இருக்கும் என எதிர்நோக்கப்படுகிறது. இந்நிலையில் பேசியுள்ள சித்தராமையா “இனி தனிப்பட்ட முறையில் சந்திக்கும்போதோ அல்லது பொது நிகழ்வுகளிலோ மரியாதை நிமித்தமாக எனக்கு பூக்கள் அல்லது சால்வைகளை வழங்குவது வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன்.

அன்பையும், மரியாதையையும் என்னிடம் வெளிப்படுத்த விரும்புபவர்கள் எனக்கு புத்தகங்களை வழங்குங்கள். உங்கள் அன்பும், மரியாதையும் என் மீது என்றும் இருக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போதும் தனக்கு பூங்கொத்து, சால்வைகளுக்கு பதிலாக புத்தகங்கள் வழங்குமாறு கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு வரும் பிரதமர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களுக்கும் புத்தகங்களை மு.க.ஸ்டாலின் பரிசளித்தார். தற்போது அதே முறையை சித்தராமையாவும் நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்