மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாகவும், சுமார் 1,500 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்பு பயிலும் பெண் மருத்துவர் (28) கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்தார். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்க கூடத்தில் அவர் தூங்கச் சென்றார்.
கடந்த 9-ம் தேதி காலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரது பிறப்பு உறுப்பு, வயிறு, வலது தொடை, கழுத்து, வலது கை, உதட்டில் காயங்கள் இருந்தன. கழுத்து எலும்பு முறிந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், தன்னார்வலர் சஞ்சய் ராயை (33) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் மருத்துவர் மரணத்துக்கு நீதி கோரி மேற்கு வங்கம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியை புறக்கணித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும் நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சை சேவையில் மட்டும் மருத்துவர்கள் நேற்றுவரை ஈடுபட்டுவந்தனர். ஆனால், இன்று அவசர சிகிச்சை பிரிவையும் புறக்கணித்து போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.