கூகுள் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து தந்து கொண்டிருக்கும் நிலையில் பண பரிமாற்றம் செய்வதற்காக கூகுள் பே என்ற செயலியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டது. இந்த செயலியை உலகம் முழுவதும் உள்ள பலர் பண பரிமாற்றத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். மிகவும் பாதுகாப்பானது, நம்பகத் தன்மை உடையது என்பதால் இந்த செயலியை அனைவரும் பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
பண பரிமாற்றம் மட்டுமின்றி தங்கம் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் இந்த கூகுள் பே மூலம் பொதுமக்கள் பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து அத்தியாவசிய தேவையான பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் திணறி வருகின்றனர். இதனை அடுத்து கூகுள் பே புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது
இதன்படி ’நியர் பை ஸ்பாட்’ என்ற பகுதியில் தங்கள் பகுதிக்கு அருகில் கிடைக்கும் அத்தியாவசியமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் குறித்த தகவலையும் அந்த கடைகளில் இருந்து பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்குவதற்கான வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்த வசதி பெங்களூரில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாகவும் வெகு விரைவில் சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத், புனே உள்ளிட்ட இடங்களிலும் தொடங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது