இந்தியா முழுவதும் தற்போது சமூக வலைதளங்கள், ஓடிடியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. பார்வையாளர்களை கவருவதற்காக ஓடிடி தளங்களில் பிரத்யேகமாக தயாரித்து வெளியாகும் வெப் சிரிஸ் மற்றும் படங்களில் கெட்ட வார்த்தைகள் பேசுவது, உடலுறவு காட்சிகள் மற்றும் அதீத ரத்தம் கொண்ட வன்முறை காட்சிகள் ஆகியவை இடம்பெறுவதாக பலரும் கூறி வருகின்றனர். திரைப்படங்களுக்கு, தொலைக்காட்சிகளுக்கு உள்ளது போல இணைய ஓடிடிகளுக்கும் கட்டுப்பாடுகள், தணிக்கை அவசியம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஓடிடி தளங்கள் மட்டுமல்லாது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்ற ஷார்ட் வீடியோக்களில் கூட அரை நிர்வாண படுக்கையறை காட்சிகள் பல சாதாரணமாக இடம்பெறுகின்றன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்னா காண்டா “முந்தைய காலங்களில் சினிமாக்களில் ஊடலை காட்சிப்படுத்த இரண்டு பறவைகள் குலாவிக் கொள்வது போலவே அல்லது பூக்கள் இரண்டு சந்தித்துக் கொள்வது போலவோ காட்சிகள் அமைக்கப்படும். ஆனால் இப்போது சமூக ஊடகங்கள், ஓடிடி தளங்களில் அந்தரங்க காட்சிகள் வெளிப்படையாக காட்டப்படுகிறது” என அதிருப்தி தெரிவித்துள்ளார்.