போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான தமிழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக்கை போலீஸார் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில், தமிழ், இந்தி சினிமா தயாரிப்பாளர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பல முக்கிய பிரமுகர்களுடன் அவர் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அரசியல் கட்சிக்கு பல லட்சம் ரூபாய் நிதி அளித்ததும் விசாரணையில் அம்பலமானது.
அவரது முக்கிய கூட்டாளியான திருச்சியை சேர்ந்த சதா என்ற சதானந்தம், சென்னையில் பதுங்கி இருப்பதை அறிந்து, அவரையும் மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீஸார் சமீபத்தில் கைது செய்து, டெல்லிக்கு அழைத்து சென்றனர்.
இதையடுத்து திருச்சி, சென்னையில் உள்ள குடோனில் சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையே, 7 நாள் காவல் முடிந்து, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் ஆஜர்படுத்தப்பட்டார். போலீஸாரின் கோரிக்கையை ஏற்று, அவரிடம் விசாரணை நடத்த மேலும் 3 நாள் அவகாசம் வழங்கப்பட்டது.