தமிழகத்தில் வரும் ஜனவரி 10ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 7ஆம் தேதிகளில், 5 வயதுக்கு உட்பட்ட 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்தியாவில் போலியோ நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, உத்தரப் பிரதேசம், பீகார், டெல்லி, உத்தராஞ்சல், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் போலியோ என்னும் இளம்பிள்ளை வாதம் நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த 5 வருடமாக ஒரு குழந்தை கூட இந்நோயால் பாதிக்கப்படவில்லை.
போலியோ இல்லாத நிலையை தக்க வைத்துக்கொள்ள ஆண்டுதோறும் முகாம்கள் நடத்தப்பட்டு அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அந்த வகையில் வரும் ஜனவரி 10 (ஞாயிற்றுக்கிழமை), பிப்ரவரி 7 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் 2 கட்டமாக போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் பொது சுகாதாரத்துறை இயக்குனர் மருத்துவர் இளங்கோ தலைமையில் சென்னையில் நடந்தது.
வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் குடிபெயர்ந்தவர்களுக்கும், அகதிகளாக வந்தவர்களுக்கும் போலியோ சிறப்பு முகாம் அவ்வப்போது நடத்தப்படுகிறது. டிசம்பர் 13ம் தேதியும் சென்னையில் நடக்கிறது.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் இளங்கோ கூறுகையில், 'போலியோ சொட்டு மருந்து ஒரு குழந்தைக்கு கொடுக்கவில்லை என்றாலும் மற்ற குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பன்றி காய்ச்சல் போன்றவற்றிற்கு தடுப்பூசி கிடையாது. ஆனால் போலியோவிற்கு தடுப்பூசி உள்ளது. அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்' என்றார்.