மருத்துவ குணம் நிறைந்த ஒட்டகப் பால்

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (12:50 IST)
மருத்துவ குணம் நிறைந்த ஒட்டகப் பால்

நம்மில் பலர் பசும் பால் அல்லது எருமைப் பாலை அருந்தியிருப்போம். ஏன், தமிழக கிராமங்களில் ஆட்டுப் பால் கூட குடித்திருப்பார்கள்.

ஆனால் ஒட்டகப் பால் பற்றி அறிந்திருக்கிறீர்களா? ஒட்டகப் பாலின் மருத்துவ குணங்கள் அளவிடற்கரியது.

ஒட்டகப் பாலில் உள்ள மருத்துவ பலன்களில் ஆண்மையின்மையை போக்கும் பலனும் உள்ளது.

இந்திய சந்தையில் ஒட்டகப் பாலுக்கு உள்ள வரவேற்பைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக ராஜஸ்தான் பால் சங்கம் (ஆர்எம்எஃப்) அண்மையில் ஒட்டகப் பால் பாக்கெட்டுகள் விற்பனையை அறிமுகப்படுத்தியது.

தற்போது ஒட்டகப் பால் பாக்கெட்டுகள் ஜெய்ப்பூர், பிகானிர், புதுடெல்லி மற்றும் புதுடெல்லியில் உள்ள சராஸ் பால் கடைகளில் கிடைக்கின்றன.

வாடிக்கையாளர்களுக்கு ஒட்டகப் பாலின் மருத்துவ குணங்கள் தெரிந்திருந்த போதிலும், நகர்ப்புறங்களில் ஒட்டகப் பால் கிடைப்பதில்லை. தற்போது ஆர்எம்எஃப்-ன் சராஸ் கடைகளில் இது கிடைக்கிறது.

ஒட்டகப் பாலில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் தவிர ஆண்மையின்மையை போக்கக்கூடிய திறனுடன் சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில், ஒட்டகப் பாலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக ஆர்எம்எஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்க்கரை நோய்க்கு ஒட்டகப்பால் மிகவும் சிறந்தது என்றும், ஒட்டகப்பாலின் குணங்கள் பற்றி பல கட்டுரைகள் படித்திருப்பதாகவும், வி.பி. சர்மா என்ற நுகர்வோர் தெரிவித்துள்ளார்.

சர்க்கரை நோயாளிகள் ஒட்டகப் பாலை அருந்துமாறு தாம் கேட்டுக் கொள்வதாகவும், நோய் இல்லாதவர்களும் கூட இதனை தினமும் குடித்து வரலாம் என்றும் அவர் கூறினார்.

ராஜஸ்தானின் கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த வயதானோர் இதுபற்றிக் கூறுகையில், ஒட்டகப் பாலில் ஆண்மையை அதிகரிக்கும் மருத்துவ சக்தி உள்ளதாகக் கூறுகிறார்கள்.

உடலளவில் திடகாத்திரமாக விளங்குவதற்கு ஒட்டகப் பால் மிகவும் உறுதுணையாக இருப்பதாகவும், நோய் எதிர்ப்புக்கு மிகவும் உகந்தது இந்தப் பால் என்று 80 வயதான தாமுரம் என்பவர் தெரிவிக்கிறார்.

ஒட்டகப் பால் பாக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மாதத்தில், நாளொன்றுக்கு ஆயிரம் லிட்டர் சராசரியாக விற்பனை செய்யப்படுகிறது.

ராஜஸ்தான் முழுவதிலும் நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் லிட்டர் ஒட்டகப் பாலை பெற முடியும் என்று ஆர்எம்எஃப் ஏற்கனவே மதிப்பீடு செய்துள்ளது.

ஆண்மையின்மை சமீப காலங்களில் அதிகரித்து வருவதும் ஒட்டகப் பால் நுகர்வை முக்கியப் படுத்தியிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

துவக்கத்தில் சர்க்கரை நோயாளிகளிடம் இருந்தும், நடுத்தர வயதுடைய நுகர்வோரிடம் இருந்தும் ஒட்டகப் பாலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், சந்தையில் அதிக அளவில் ஒட்டகப் பால் கிடைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சராஸ் பால் பண்ணை நிர்வாக இயக்குனர் மதுக்கர் குப்தா தெரிவித்துள்ளார்.

ஒட்டகப் பாலில் லெனோலின் அமிலம் உட்பட 6 வகையான அமிலங்கள் காணப்படுவதாகவும் உடலின் சுருக்கங்களை போக்குவது உள்ளிட்ட தோல் தொடர்பான வியாதிகளையும் நிவர்த்தி செய்வதாக உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

எது எப்படியோ ஒட்டகப் பால் விரைவில் அனைத்து இடங்களிலும் கிடைக்கப் போவது உறுதி.

வெப்துனியாவைப் படிக்கவும்