காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வழக்கமாக அவர் போட்டியிடும் உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியிலும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக அவர் மக்களவி உறுப்பினராக இருந்துவருகிறார். 2004, 2009 மற்றும் 2014 ஆகிய தேர்தல்களில் அந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார்.
கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி தனது தங்கை பிரியங்கா காந்தியோடு வந்து ஏப்ரல் 4 ஆம் தேதி மனுத்தாக்கல் செய்தார். அதையடுத்து அவரது ஆஸ்தான தொகுதியான அமேதியில் நேற்று அவர் வேட்புமனுத்தாக்கல் செய்தார். வேட்புமனுத்தாக்கலின் போது அங்கு ராகுல் காந்தியைக் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில்‘ வேட்புமனுத்தாக்கலின் போது ராகுலின் மீது அதி நவீன துப்பாக்கியின் லேசர் ஒளிப்பட்டது’ எனத் தெரிவித்துள்ளனர். இதனால் ராகுலைக் கொல்ல சதித்திட்டம் நடப்பதாகக் காங்கிரஸ் குற்றச்சாட்டை வைத்துள்ளது. ஆனால் ராகுல் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காங்கிரஸிடம் இருந்து தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.