தற்போது நாகப்பட்டினம் முதல் இலங்கை வரை கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டமாக, ராமேஸ்வரம் முதல் இலங்கை வரை கப்பல் போக்குவரத்து தொடங்கவும், தனுஷ்கோடி முதல் திருச்செந்தூர் வரை கப்பல் போக்குவரத்தை தொடங்கவும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராமேஸ்வரம் தனுஷ்கோடி முதல் இலங்கை தலைமன்னார் வரை 1964 வரை கப்பல் போக்குவரத்து நடைபெற்றது. ஆனால், 1964-ல் தனுஷ்கோடியில் வீசிய புயலின் காரணமாக கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் பின்னர், 1969 முதல் 1984 வரை மீண்டும் கப்பல் போக்குவரத்து நடைபெற்றது.
தற்போது, மீண்டும் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கப்பல் போக்குவரத்து தொடங்கினால் சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த வசதி கிடைக்கும் என கூறப்படுகிறது.
அதேபோல், தனுஷ்கோடி முதல் திருச்செந்தூர் வரை சுற்றுலா கப்பல் போக்குவரத்தையும் தொடங்குவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைத்ததும், ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். மேலும், கப்பல் நிறுத்துவதற்கான பாலம் கட்டும் பணியும் தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.