சூப்பர்ஹீரோ படங்கள் ஏராளமாக வெளியாகி வந்தாலும், சூப்பர்ஹீரோக்களிலேயே உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள கதாபாத்திரம் ஸ்பைடர்மேன். சோனி வெளியிட்ட ஸ்பைடர்மேன் படங்கள் தொட்டு இன்று மார்வெல் ஸ்டுடியோஸின் ஸ்பைடர்மேன் வரை அனைத்தையும் கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.
இந்நிலையில் 2001ல் வெளியான ஸ்பைடர்மேனில் நடித்த டோபி மெக்குரே, அமேசிங் ஸ்பைடர்மேனில் நடித்த ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் மற்றும் தற்போதைய மார்வெல் ஸ்பைடர்மேனான டாம் ஹாலண்ட் மூவரையும் இணைத்து ஒரு ஸ்பைடர்மேன் படம் வர வேண்டும் என ரசிகர்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியாகி வரும் ஸ்பைடர்மேன் படத்தொடரின் மூன்றாவது படம் படப்பிடிப்பு நிலையில் உள்ளது. இந்த திரைப்படம் குறித்த பல தகவல்களை மார்வெல் கட்டி காத்து வந்தாலும் சில தகவல்கள் ரசிகர்களிடையே கசிந்து விடுகின்றன. தற்போது படம்பிடிக்கப்பட்டு வரும் ஸ்பைடர்மேன் படத்தில் முந்தைய ஸ்பைடர்மேன்களான கார்பீல்ட் மற்றும் டோபி மெக்குரே ஆகிய இருவரும் நடிப்பதாக தகவல்கள் பரவியுள்ளது. மேலும் 2004ல் வெளியான ஸ்பைடர்மேன் படத்தில் டாக்டர் ஆக்டோபஸ் என்ற வில்லனாக தோன்றிய ஆல்ப்ரட் மொலினா இந்த படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதிலும் டாக்டர் ஆக்டோபஸாக நடிக்கிறாரா என்பது குறித்து தெரியவில்லை.