வாட்ஸ் அப்பில் அரசியல் தலைவர்களை கிண்டல் செய்தால் சிறை தண்டனை: ராஜேஷ் லகானி

சனி, 5 மார்ச் 2016 (15:10 IST)
வாட்ஸ் அப்பில் அரசியல் தலைவர்களை கிண்டல் செய்து இழிவாக விமர்சித்தால் சிறை தண்டனை வழங்கப்படும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


 

 
சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
 
இதைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகள் தங்கள் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 
அரசியல் கட்சியினர் சுவர்களில் எழுதியுள்ள விளம்பரங்களை அழிக்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் ஆணையம் ஊழியர்களை நியமித்து அழிக்கும்.
 
இதற்கான செலவு அரசியல் கட்சிகளிடம் வசூலிக்கப்படும். அரசியல் கட்சி தலைவர்களை தனிப்பட்ட முறையில் இழிவாக விமர்சனம் செய்வது சட்டப்படி குற்றமாகும்.
 
பேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிக அளவில் இழிவான விமர்சனங்கள் வருவதாக புகார்கள் வருகின்றன.
 
இவற்றை கண்காணிக்க தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்காக புதிதாக சாப்ட்வேர் வாங்கி அதன் மூலம் கண்காணிக்கிறோம்.
 
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி வாட்ஸ் அப்பில் தலைவர்களை இழிவாக விமர்சனம் செய்தால் இந்திய தண்டனை சட்டம் 188 ஆவது பிரிவின்கீழ் 1 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ. 200 அபராதம் விதிக்க வழிவகை செய்யப்படுகிறது.
 
தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள், ஊழியர்கள் நடைமுறைகளை மீறி அரசியல்வாதிகளை சந்தித்தால் அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்.
 
சென்னை தீவுத்திடல் அரசு பொருட்காட்சியில் அரசின் சாதனைகளை அரசு செலவில் விளம்பரப்படுத்தப்படுவதாக வந்துள்ள புகார் குறித்தும் விசாரிக்க இருக்கிறோம்.
 
தேர்தல் ஆணையம் விதிப்படி அரசு சாதனைகளை இப்போது அரசு செலவில் விளம்பரப்படுத்தக்கூடாது.
 
திமுக தரப்பில் இன்று 3 புகார் மனுக்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதை அரசு துறைக்கு அனுப்பி விளக்கம் கேட்க இருக்கிறோம். இவ்வாறு ராஜேஷ் லகானி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்