கல்கா-சிம்லா ரெயில் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிப்பு!
திங்கள், 10 நவம்பர் 2008 (12:59 IST)
webdunia photo
WD
நமது நாட்டிலுள்ள புகழ்மிக்க கோடைச் சுற்றலாத் தலங்களில் ஒன்றான சிம்லாவிற்குச் செல்லும் கல்கா-சிம்லா இரயில் பாதை உலக பாரம்பரியச் சின்னமாக ஐ.நா.வின் யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நீலகிரி மலை இரயில் பாதை உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டு அதன் பராமரிப்பிற்கு யுனெஸ்கோவின் உதவியையும் தென்னக இரயில்வே பெறுகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற டார்ஜிலிங் சுற்றுலாத் தலத்திற்குச் செல்லும் சில்லிகுரி-டார்ஜிலிங் இரயில் பாதையும் உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ ஏற்கனவே அறிவித்ததுள்ளது.
இவைகளைத் தொடர்ந்து ஹரியானா, இமாசலப் பிரதேச எல்லையில் உள்ள கல்கா இரயில் நிலையத்திலிருந்து இமாசலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவிற்குச் செல்லும் மலை இரயில் பாதையையும் உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
1905ஆம் ஆண்டு முதல் இந்த இரயில் பாதை பயன்பாட்டில் உள்ளது. வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் அவர்களின் கோடைக்காலத் தலைநகராக சிம்லா இருந்தது. கல்காவிலிருந்து சிம்லாவி்ற்குச் செல்லும் 96 கி.மீ. இரயில் பாதையில் (இது ஒரு வழிப்பாதை) இன்று பல இரயில்கள் இயக்கப்படுகின்றன.
webdunia photo
WD
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்குச் செல்லும் நீலகிரி மலை இரயிலில் செல்லும் போது காணும் இயற்கை அழகு அலாதியானது. ஊட்டி பயணத்தின் ஒரு சுற்றுலா அங்கமாகவே நீலகிரி இரயில் பயணம் இருப்பதை அதில் சென்றவர்கள் உணர்வர்.
ஆனால் கல்காவிலிருந்து சிம்லா செல்லும் இரயில் பாதையில் மலைகள்தான் உள்ளனவே தவிர, கண்ணி்ற்கு குளுமையான பசுமை இருக்காது. சிம்லாவை நெருங்கும்போது ஓரளவிற்கு அழகாக இருக்கும். எனவே ஊட்டிக்குச் செல்லும் நான்கரை மணி நேர மலை இரயில் பயணத்திற்கும் கல்கா - சிம்லா இரயில் (கோடைக் கால) பயணத்திற்கும் இடையே வேறுபாடு அதிகம்.
ஆனால் ஒரு ருசியான பயண அனுபவத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும். கல்காவிற்கும், சிம்லாவிற்கும் நடுவில் உள்ள 103 சுரங்கங்கள் வழியாக இந்த இரயில் செல்கிறது. இதில் ஒரு சுரங்கத்தைக் (பரோக்) கடக்க 3 நிமிடங்கள் ஆகும்.
அதிகாலை இரயிலில் சிம்லா செல்பவர்கள் பரோக் (காலை உணவிற்காக நிறுத்தப்படும்) இரயில் நிலையத்தில் கிடைக்கும் கட்லட் - சூடான, மிகச் சுவையான உணவு - குறிப்பிடத்தக்கது. இதுதான் கட்லட் என்றால் நாம் இங்கெல்லாம் அந்தப் பெயரில் சாப்பிடுவது என்னவென்று கேட்கத் தோன்றும். அப்படியொரு ருசி. மூன்று கட்லட்டை விழுங்கிவிட்டு காஃபி அருந்தினால் போதுமானது. இப்பயணத்தில் கட்லட் முக்கிய அங்கம்.
காலை நேரத்தில் - காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரை - 4 இரயில்கள் இயக்கப்படுகின்றன. சாதாரண இரயில் சிம்லா செல்ல கட்டணம் ரூ.40 மட்டுமே. மாலையிலும் நான்கு இரயில்கள் சிம்லாவிலிருந்து கல்காவிற்கு வருகின்றன.
தலைநகர் டெல்லியில் உள்ள பழைய டெல்லி இரயில் நிலையத்திலிருந்து இரவு 10.30 மணியளவில் புறப்படும் ஹவ்ரா-கல்கா விரைவு இரயில் அதிகாலை 4.30 மணியளிவில் கல்கா சென்று சேர்ந்துவிடும். அடுத்த ஒரு மணி நேரத்தில் இரண்டு இரயில்கள் அடுத்தடுத்து சிம்லாவிற்குப் புறப்படுகின்றன.