வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் யானை சவாரி திட்டம் துவங்கியுள்ளது.
webdunia photo
WD
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு குடும்பத்தாருடன் மற்றும் பள்ளிக் கல்லூரிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அதிகம்.
எனவே அவர்களை மேலும் கவரும் வகையில் யானை சவாரித் திட்டத்தைத் துவக்க முடிவு செய்யப்பட்டது.
10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு யானை மற்றும் குதிரை சவாரி திட்டம் செயல்பட்டு வந்தது. ஆனால், சில ஆண்டுகளில் அந்த திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த நிலையில், யானை சவாரி திட்டம் மீண்டும் துவங்கியுள்ளது.
இதற்காக, பொள்ளாச்சி டாப்ஸ்லிப் சுற்றுலா தலத்தில் யானை சவாரிக்காக பயன்படுத்தப்பட்ட அஸ்வினி என்ற பெண் யானையும், பாரி என்ற ஆண் யானையும் வண்டலூருக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
காலை 9.30 மணியில் இருந்து 11.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையும் பார்வையாளர்கள் யானை சவாரிக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஒரு நபருக்கு, கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது.
5 வயதுக்கு மேற்பட்டவர்கள் யானை சவாரி செய்யலாம். ஒரே நேரத்தில் 5 பேர் யானை மீது அமர்ந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மீன் அருங்காட்சியகத்தில் தொடங்கி, யானைகள் உலா வரும் பகுதி வரை ஏறத்தாழ 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 30 நிமிட நேரம் யானை மீது அமர்ந்து உலா வரலாம்.
இந்த யானை சவாரி திட்டம் நல்ல முறையில் நடந்தால், முதுமலையில் இருந்து மேலும் இரண்டு யானைகளை வரவழைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், வண்டலூர் உயிரியல் பூங்கா அதிக பரப்பளவில் அமைந்திருப்பதால் நடந்தே சென்று முழுமையாக சுற்றிப்பார்க்க முடியாத நிலை இருந்தது. இதனை நீக்கும் வகையில் சைக்கிள் மற்றும் பேட்டரி கார்களில் சென்று சுற்றிப்பார்க்கும் திட்டம் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.