கூழமந்தல் பேசும் பெருமாள் திருக்கோயில்

விஷ்ணு பகவானின் அவதாரங்கள் 10 என்றாலும், எம்பெருமானின் உருவங்கள் எண்ணிலடங்கா. அதன்படி கம்பீரமான தோற்றத்துடன் கூடிய விஷ்ணு கோயில் கூழமந்தல் எனும் ஊரில் அமையப் பெற்றுள்ளது. பெருமாள் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக "பேசும் பெருமாள்" என்ற பெயரில் காட்சியளிக்கின்றார்.

பல வருடங்களுக்கு முன்பு 12 அடி உயர மகா விஷ்ணு சிலை பூமியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இப்பெருமாள் "பேசும் பெருமாள்" என்று பக்தர்களின் அழைப்புக்கிணங்க கூழமந்தல் எனும் ஊரில் கோயில் கொண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் வழியில் 18 கி.மீ. தொலைவில் உள்ளது கூழமந்தல் என்ற ஊர். இவ்வூர் இப்போது சிறிய ஊராக காணப்பட்டாலும், இதனுடைய பெயரும், புகழும் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. இவ்வூருக்குச் செல்ல நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.

கூழமந்தல் :

கூழம் என்னும் பண்டைச் சொல்லுக்கு எள், திலம், திலகம், கூழகம் என்ற பொருள் உண்டு. பந்தல் - ஓடும் சாலை, பந்தர், விதானம் என்று பொருள். பல்லவர்களின் தலைநகரான காஞ்சிபுரத்தில் இருந்து பிற்காலச் சோழர்களின் தலைநகராகிய கும்பகோணம் அருகில் உள்ள பழையாறை மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் போன்ற நகரங்களுக்கு இவ்வூர் வழியாக நெடுஞ்சாலை உள்ளது. இங்கு எள் போன்ற பயிர்கள் நிரம்ப விளைந்ததால் "கூழம் பந்தல்" என்று அழைக்கப்பட்டு பின்னர் கூழமந்தல் என்றாகியிருக்கலாம்.

இவ்வூரில் உள்ள பெருமாள் கோயில் கல்வெட்டு, இவ்வூரை "கூழன் பந்தல்" என்கிறது. கூழன் என்பது ஒருவகை பலா மரத்தின் பெயர். அவ்வகைப் பலா மரங்கள் நிறைந்திருந்து, அவ்வழியாகச் சாலை சென்றதால், "கூழன் பந்தல்" எனப் பெயர் வந்திருக்கலாம் என்றும் அறியப்படுகிறது.

விக்கிரமசோழன் கட்டியக் கோயில் :

ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துக் காலி(ழி)யூர்க் கோட்டத்து பாகூர் நாட்டு நகர் விக்கிரம சோழபுரம் என்று சிவன் கோயில் கல்வெட்டு கூறுகிறது. முதலாம் ராஜேந்திரனின் சிறப்புப் பெயர்களுள் ஒன்று விக்கிரமசோழன். கி.பி.1012 முதல் 1044 வரை முதலாம் ராஜேந்திரன் சோழநாட்டை ஆண்டான். வட ஆற்காடு மாவட்டம் பிரம்மதேசத்தில் இறைவனடி சேர்ந்தான். இவனுடைய ஆட்சிக் காலத்தில் இவ்வூர் "விக்கிரமசோழபுரம்" எனப் பெயர் பெற்றது.

ராஜேந்திரன் வடக்கே கங்கை வரை சென்று வெற்றி பெற்றபின், தென் ஆற்காடு மாவட்டத்தில் "கங்கை கொண்ட சோழபுரம்" எனும் நகரத்தை உருவாக்கினான். அதையே தலைநகராகவும் கொண்டான். அங்கு "கங்கை கொண்ட சோழீச்சுரம்" என்னும் மாபெரும் கோயிலையும் கட்டினான்.

கூழம் பந்தலிலும் ஆசார்யர் சர்வ சிவ பண்டிதர் ஆணையால் அற்புத கற்றளி ஒன்று கிளம்பியது. இதுதான் "கங்கை கொண்ட சோழீச்சுரம்" என்னும் சிவன் கோயிலாக உருவாயிற்று. இக்கோயிலில் உள்ள சிவலிங்கம் மிகவும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. இக்கோயில் முழுவதும் கருங்கற்களால் இழைத்து கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் தெப்பக்குளத்தில் மிதப்பது போன்ற அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது இதன் சிறப்பு அம்சம்.

ஈசான்யத்தில் சிவாலயமும், பஸ்சிமத்தில் விஷ்ணு கிரகமும் ஒரு ஊரின் நேத்திரங்கள் என்பார்கள். அதை அனுசரித்து, இங்கும் மேற்கில் ஒரு பெருமாள் கோயில் கட்டப்பட்டது. அந்தக்கோயிலே பேசும் பெருமாள் திருக்கோயிலாகும்.

12 அடி உயர பேசும் பெருமாள் :

கங்கை கொண்ட சோழீச்சுரம் சிவன் கோயில் கட்டப் பெற்ற காலத்திலேயே (கி.பி.1012 - 1044) பேசும் பெருமாள் கோயிலும் கட்டப்பட்டிருக்கிறது. உண்மையாகவே பெருமாள் முன்பு நின்று நோக்கினால், பெருமாள் கருணையுடன் நம்மை நோக்கி புன்முறுவலுடன், பேசுவது போல அமையப்பெற்றுள்ளது.

"கோப்பரகேசரி பத்மரான நுடையார் ராஜேந்திர தேவர்க்கு யாண்ட
எட்டாவது ஐயங்கொண்ட சோழ மண்டலத்து காலியூர்க் கோட்டத்த
பாகூர் நாட்டு நகரம் விக்கிரம சோழபுரத்துக் கூடி நாநாதேசி
இசையாயிரத்தை போற்றுவர்"

என்று இங்கு கிடைத்த கல்வெட்டு கூறுகிறது. எனவே இக்கோயில் முதலாம் ராஜேந்திரன் ஆட்சிக் காலத்திலேயே கட்டப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது தெளிவு. மேலும் இப்பேசும் பெருமாள் திருக்கோயில் திருப்பணியின்போது கிடைத்த இரண்டு நுழைவாயில் தெற்கு, வடக்கு நிலைக்கால்களில் அவை,

"ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவநசகர்வத்திகள் ஸ்ரீவிஜயகண்
கோபாலற்குயாண்டு இருபது காலியூற் கோட்டத்து கூவழன
பந்தலான விக்கிரம சோழபுரத்து பேசும் பெருமாள் கோயில
காணியுடைய உறபலியாந்தான் நூற்றிவுடையான
சொற்பார்பணிபந்தல்"

என்று சொல்கிறது.

பேசும் பெருமாள் பெயர்க் காரணம் :

பேசும் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார். மிகவும் கம்பீரமான தோற்றம். இரு கைகளிலும் சங்கு சக்கரங்கள், மற்றொரு வலக்கை நமக்கு அருள்பாலிக்கும் வரதஸ்தம், இடக்கை தொடையில் பதிந்துள்ளது. ஏராளமான அணிகலன்கள், கிரீடம், அதில் பல வண்ண வேலைப்பாடுகள்.

ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் அணிந்துள்ள அழகிய அணிகலன்கள், தலைக்கிரீடங்களும் மெய்மறக்கச் செய்கின்றன. பெருமாள் முன்பு நின்று நோக்கினால், பெருமாள் கருணையுடன் நம்மை நோக்கி புன்முறுவலுடன் பேசுவதுபோல விளங்குவதால் "பேசும் பெருமாள்" என்று பெயர்பெற்றார்.

கண் இமைக்காமல் நாளெல்லாம் பார்த்து வணங்கத்தக்க இத்திருமேனிகளின் அழகும், நிற்கும் பாங்கும் கண்கொள்ளாக் காட்சி. இவ்வளவு உயரமும், எழிலும் வாய்ந்த திருவுருவங்களை வேறு எங்கும் காண இயலாது. இத்திருமேனிகளின் காதுகளில் மிக மிகச் சிறிய ஊசி நுழைவதற்குரிய கண்ணுக்குத் தெரியாத துவாரங்களை அமைத்து சிற்பிகள் தங்கள் கலைத் திறனையும், கை வண்ணத்தையும் காட்டியுள்ளனர்.

தாமரை மலருடன் தாயார் :

இக்கோயிலின் தனிப்பெருஞ்சிறப்பு தாயார் இருவருமே தங்கள் வலக்கையில் தாமரை மலர்களை பற்றியிருப்பது. இது மிகமிக அரிதானக் காட்சி. மற்ற கோயில்களில் ஒரு தேவி வலக்கையிலும் இன்னொரு தேவி இடக்கையிலும் தாமரை மலரை வைத்திருப்பார். இங்கு இதிலும் புதுமை. இவ்வளவு கம்பீரமான தோற்றமாக இருந்தாலும் சாந்த மூர்த்தியாக திகழ்கிறார் பேசும் பெருமாள்.

மன்னனுடன் பேசிய பெருமாள் :

ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூரையும், நம் காஞ்சிபுரத்தையும் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர்கள் தெலுங்கு சோழர்கள். அவர்களில் தமிழ்நாட்டுடன் தொடர்பு கொண்டவன் ஸ்ரீ விஜயகண்ட கோபாலன். இவன் கி.பி. 1250-ல் ஆட்சி ஏற்றான். பிறகு கி.பி. 1270 ஆம் ஆண்டு இக்கோயிலுக்கு வந்து இப்பேசும் பெருமாளிடம் பேசி, பேசியதற்கு ஆதாரமாக இரண்டு வாயிற்படி நிலைகால்களில் கல்வெட்டுக்கள் பொரித்துள்ளான். இவன் இக்கோயிலுக்காக அந்தியிலும், சந்தியிலும் மூன்று விளக்கு எரிக்க (வைக்க) 14 பணமும் பதின்கல நெல்லும் கொடுத்துள்ளான்.

இவ்வூர் பட்டன் (பட்டாச்சாரியார்) ஒருவர், உலகில் சூரியன், சந்திரன் உள்ளவரை அந்த மூன்று விளக்கையும் கோயிலில் எரிய இந்தப் பணத்தையும், நெல்லையும் பெற்றுக் கொண்டான். இவ்வாறு பேசும் பெருமாள் திருக்கோயில் பெரும்புகழ் பெற்று விளங்குகிறது.

திருவிழாக்கள் :

பெரும்புகழ் பெற்ற பேசும் பெருமாள் திருக்கோயிலில் முக்கிய திருவிழா நாட்களான தமிழ் வருடப் பிறப்பு, வைகாசி விசாகம் கருடசேவை, திருவாடிப்பூரம், கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி 5 சனிக்கிழமைகள், தீபாவளி, விஷ்ணு கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, கூடாறவள்ளி, தை பொங்கல், தை பூசம், பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் ஆகியன விசேஷ நாட்களாகும். இவை தவிர பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

மேலும் மகாமண்டபம், சுற்றுச்சுவர், தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி ஆகியவை ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.

"மா மதி கண்ணுள்ளதாகில் இங்கு நோக்கிப் போ" என்று அன்று யசோதை கண்ணனின் குறும்புகளைப் பார்க்க விளித்தாள். இன்று பக்தர்கள் கண்ணுள்ளதாகில் கூழம் பந்தல் என்ற ஊரை சென்று பாருங்கள் என்று கூறலாம்.

கோயில் முகவரி :

ஸ்ரீ பேசும் பெருமாள் திருக்கோயில்,
கூழமந்தல், செய்யார் வட்டம்,
திருவண்ணாமலை மாவட்டம் - 631 701.
தமிழ்நாடு, இந்திய
தொலைபேசி : 04182 245304, 245303.

வெப்துனியாவைப் படிக்கவும்