ஏற்காடு

தமிழ்நாட்டில் கோடை வாசஸ் தலங்கள் என்றாலே நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது ஊட்டி, கொடைக்கானல் தான். ஆனால் அவற்றிற்கு இணையான இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் ஏற்காடு.

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு சொர்க்கமாகும். மரங்களின் நிழலும் தென்றலின் சுகமும் வெயிலின் தாக்கத்தையும் மறைத்துவிடும் சூழல் கொண்ட ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

சுமார் 383 சதுர கிலோ மீட்டர் கொண்ட ஏற்காட்டில் இயற்கை எழில் மிகுந்த குன்றும் அதையொட்டி அமைந்துள்ள ஏரியும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. மேலும் இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்காக்களும் இடம்பெற்றுள்ளன.

கிள்ளியூர் நீர்வீழ்ச்சியின் அழகை காண இருகண்கள் போதாது. ஏற்காடு ஏரியில் நிரம்பினால் இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5342 அடி உயரத்தில் உள்ள மலைக் கோவில் மிகவும் பழமையான, பிரசித்திப் பெற்ற கோயிலாகும்.

ஊட்டி, கொடைக்கானல் சென்று கோடைக் காலத்தை கழிக்க வசதியில்லாத ஏழை எளிய நடுத்தர மக்கள் ஏற்காட்டில் மிகக் குறைந்த செலவில் நிறைந்த ஆனந்தத்தை அனுபவிக்கலாம்.

என்ன கோடைக் காலம் வந்துவிட்டது. ஏற்காட்டிற்கு செல்லலாமா?

வெப்துனியாவைப் படிக்கவும்