தூண்டில் - விமர்சனம்!

சனி, 23 பிப்ரவரி 2008 (16:49 IST)
webdunia photoWD
காதலியை ஏமாற்றிவிட்டு வேறொருத்தி கழுத்தில் தாலி கட்டும் காதலனை காதலி பழிவாங்கும் கதை. எப்படி பழிவாங்குகிறார் என்பதில் வாடகைதாய் சமாச்சாரத்தைப் புகுத்தி சவாரஸ்யப்படுத்த முயன்றிருக்கிறார் கே.எஸ். அதியமான்!

கணவன், மனைவியாக வரும் ஷாம், சந்தியாவின் நெருக்கமும், உருக்கமும் நேர்த்தி. காதலனால் கைவிடப்பட்டு அவனைப் பழிவாங்கும் வன்மத்துடன் திரியும் திவ்யாவின் மிடுக்கும், துடுக்கும் கிளாஸ். இந்த இரு பெண்களுக்கும் நடுவில் மத்தளமாக ஷாம்.

வெகுளியாக குழைவதாகட்டும், வெகுண்டெழுந்து சீறுவதாகட்டும், இயலாமையிலகுமைவதாகட்டும்... ஒவ்வொரு காட்சியிலும் அனாயசமாக ஊதித் தள்ளுகிறார் சந்தியா. சாவித்ரி, ரேவதி வரிசையில் தாராளமாக சந்தியாவுக்கும் தரலாம் ஒரு சிம்மாசனம்!

கோபப்படவும் முடியாது, குலுங்கி அழவும் முடியாது. அப்படியொரு சூழலில் ஓர் ஆண் மகன் என்ன செய்வான்? அதை அளவு மீறாமல் செய்திருக்கிறார் ஷாம்.

திவ்யா ஷாமின் முன்னாள் காதலி என தெரியவரும் போது சின்ன ஷாக். கோர்ட்டில் நான்தான் குழந்தையின் உண்மையான அம்மா என்று அவரே அடுக்கடுக்காக காரணம் சொல்லும் போது, அடப்பாவி என சொல்ல வைக்கிறார்.

எளிமையான இந்த காதல் த்ரில்லருக்கு எம் டி.வி ஸ்டைலில் எடிட்டிங் செய்திருப்பது பூனைக்கு புலி வேஷம் போட்ட மாதிரியிருக்கிறது. ஷாம் டெலிஃபோனில் நம்பர் போடும் காட்சியை குளோசப்பில் இரு வேறு கோணங்களில் ஒரே நேரத்தில் திரையில் காட்டுகிறார்கள். இது எதற்கு? நடப்பது, பேசுவது என எல்லா காட்சிகளும் இப்படி இரண்டு மூன்று தனித்தனி காட்சிகளாக திரையில் காட்டப்படுகிறது. காட்சிகள் மாறும்போது பயன்படுத்தியிருக்கும் எடிட்டிங் யுக்திகளும் கதைக்கு எந்த வகையிலும் பயன்படவில்லை. மாறாக படம் மீதான பார்வையாளனின் ஓர்மையை சிதைக்கவே உதவுகின்றன.

webdunia photoWD
படுக்கையை பகிர்ந்த மறு நிமிடமே, யாரோ முகம் தெரியாதவன் போனில் சொன்னதை கேட்டு, ஆளில்லாத கடற்கரையில் திவ்யாவை ஷாம் நள்ளிரவில் தவிக்க விட்டுச் செல்வதை நம்ப முடியவில்லை. ஷாம் கதாபாத்திரம் அத்தனை முட்டாளா?

தன்னை மாடலாக்கிய ஆள்தான் தனது காதலுக்கு வில்லன் என்பதை சரியாக கிளைமாக்ஸில் திவ்யா தெரிந்து கொள்வதும், மன்னிப்பு கேட்பது போல் கெஞ்சி, திடீரென்று இப்படியெல்லாம் பேசுவேன்னு பார்த்தியா என குரல் உயர்த்துவதும் அனேகமாக எல்லா தமிழ் சினிமாக்களிலும் பார்த்துப் புரையேறிய காட்சிகள்.

கவியரசுவின் கேமராவை ரசிக்க முடியாமல் செய்திருக்கிறது எடிட்டிங். ஷாம் திவ்யாவை பிரிவும் அந்தக் கடற்கரை காட்சியில், கடலும் அதன் பின்னணியில் தெரியும் நிலவும், நட்சத்திரங்களும்... காட்சித் கவிதை!

காதல், கோபம், சோகம் என்று கதாபாத்திரங்கள் எந்தெந்த உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்களோ, அதற்கு முன்பே இசையமைப்பாளரின் வாத்தியங்கள் அந்தந்த உணர்வுகளுக்கான இசையை வாசிக்கத் தொடங்கி விடுகின்றன. இதனால் படம் பார்த்து கதை சொல்லும் பள்ளி மாணவர்களின் ரசனைக்கு தள்ளப்படுகிறோம். பாடல்கள் டப்பிங் பட வாசனையுடன் கேன்டீன் பக்கம் ஓட வைக்கின்றன.

மருத்துவராக வரும் ரேவதிக்கும், அந்த நீள முடி வில்லனுக்கும் அதிக வேலையில்லை. விவேக்கின் அப்பீட்டு ரிப்பீட்டு சவடால்களால் காது செவிடாகிறது. Noise Pollution! சினிமா கதாபாத்திரங்களை இமிடேட் செய்யும் இம்சையை என்றுதான் விடப்போகிறாரோ!

இயல்பாகவும், அழுத்தமாகவும் படத்துடன் பொருந்திப் போகும் வசனங்களுக்காகவும், தாய்மையின் வலியை சந்தியாவின் வழியாக சிறப்பாக வெளிப்படுத்தியதற்காகவும் அதியமானை பாராட்டலாம்.

இளமையின் கொந்தளிப்பை விட தாய்மையின் தத்தளிப்பே தூண்டிலை ஓரளவேனும் காப்பாற்றுகிறது.