மச்சக்காரன் ‌திரை‌ப்பட விமர்சனம்

செவ்வாய், 20 நவம்பர் 2007 (12:41 IST)
webdunia photoWD
பணக்கார வீட்டுப் பெண்ணை சுமாரானவன் காதலி‌த்து போராடி ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்வதை பு‌திய கதாபா‌த்‌திர‌ங்க‌ள் ம‌ற்று‌ம் கதையமை‌ப்புட‌ன் சொ‌ல்‌லி‌யிரு‌க்‌கிறா‌ர் இய‌க்குந‌ர்.

ஜீவன், காம்னா, ஜி.எம்.குமார், எம்.எஸ். பாஸ்கர், மயில்சாமி, சோப்ராஜ், வினோத்ராஜ், மாளவிகா நடி‌த்‌து‌ள்ள இ‌ப்பட‌‌த்தை ஏ.வெங்கடேஷ் ஒளிப்பதிவில் யுவன்ஷங்கர்ராஜா இசையமை‌த்து‌ள்ளா‌ர். தமிழ்வாணன் இயக்கியுள்ள இ‌ப்பட‌த்தை, மெட்ராஸ் எண்டர்டெய்ன்மெண்ட் (பி) லிட் தயா‌ரி‌த்து‌ள்ளது.

வேலையில்லாத ஏழை வாலிபன் ஜீவன். வாழ்க்கையில் எல்லாமே அவனுக்கு எதிர்மறையாக நடக்கிறது. செய்யாத தவறுக்கு பழிவருவது... பலரும் அவனைத் தவறாக நினைப்பது என்று புறக்கணிக்கப்பட்டவன். ஒரு சூழலில் இவன் மீது ஒரு பழி விழ... மன்னிப்பு கேட்கிறார். 'செய்யாத தவறுக்கு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?' என்கிறது ஒரு குரல். அது காம்னா. இதுவரை தன்மேல் கல்லெறிந்த கூட்டத்தில் ஒருவர் மட்டும் பூ வீசியது குறித்து ஜீவன் மகிழ்கிறார்; நெகிழ்கிறார். காம்னா மீது காதல் வருகிறது.

பெண் கேட்டு ஜீவன் வீட்டுக்கு காம்னாவின் அப்பா ஜி.எம்.குமார், அண்ணன் சோப்ராஜ் என குடும்பமே செல்கிறது. தன் மகனுக்கு வேலையில்லை என்று கூறி மறுத்துவிடுகிறார் வினோத்ராஜ். இதனால் தன் குடும்பத்தையே ஜீவன் வெறுக்கிறார். பிறகுதான் தெரிகிறது... தன் அப்பா தானாகப் பேசவில்லை ஜி.எம்.குமாரின் மிரட்டலால்தான் பேசியிருக்கிறார் என்று.

இதையறிந்து கோபமடைந்த ஜீவன் காம்னாவைக் கூட்டிக்கொண்டு ஓட ஜி.எம்.குமாரின் பணபலமும் சோப்ராஜின் போலீஸ் பலமும் துரத்த இறுதியில் காம்னா கழுத்தில் ஜீவன் எப்படி தாலிகட்டுகிறார் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

பணக்கார வீட்டுப் பெண்ணை சுமாரானவன் காதலிப்பது என்பதும் அவன் எப்படி பணபலத்தை முறியடித்து காதலியைக் கைப்பிடிக்கிறான் என்பதும் புதிய கதையல்ல. இருந்தாலும் பின்னணிகளை மாற்றிப் புதுமையாகத் தர முயன்றிருக்கிறார் இயக்குனர். ஒரு தரித்திரன் காதலி கிடைத்ததும் எப்படி அதிர்ஷ்டசாலியாகி மச்சக்காரனாகிறான் என்பதுதான் மையக்கருத்து.

படத்தில் நடிப்பில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருப்பவர் ஜீவன் எனலாம். தாழ்வு மனப்பான்மையுள்ள இளைஞன், ரொமான்ஸ் செய்யும் காதலன், போலீஸ் பிடியில் வதைபடும் அப்பாவி, எதிரியுடன் மோதும் ஆவேச இளைஞன் என பல சந்தர்ப்பங்களில் பளிச்சிடுகிறார். படத்தில் பின்பாதியில்தான் ஜீவனுள்ள நடிப்பில் மிளிர்கிறார் ஜீவன்.

காம்னா ஒரு ரப்பர் பொம்மை போல வருகிறார். பாடலுக்கு ஆடுகிறார். படம் முழுக்க வந்தாலும் நினைவில் நிற்காத நடிப்பு. ஒரு பாடலில் கவர்ச்சி காட்டுகிறார்.

காம்னாவின் அப்பாவாக வரும் ஜி.எம்.குமாரும் அவரது மகனாக வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோப்ராஜும் நல்ல நடிப்பால் நம்மைக் கவர்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கரும் மயில்சாமியும் சந்தானமும் சரிவர பயன்படுத்தாமல் வீணடிக்கப்பட்டுள்ளார்கள்.

யுவனா இசை என்று ஆச்சரியப்படும் அளவுக்கு சுமாரான பாடல்கள். 'வயசு பொண்ணுக்கு' பாடல் நன்றாக கிராமிய அழகுடன் படமாக்கப்பட்டுள்ளது சற்றே ஆறுதல். மாளவிகா கூட ஒரு சுமாரான பாடலுக்கு ஆடியுள்ளார்.

படத்தின் முன்பாதியை சுமாராக நகர்த்தியுள்ள இயக்குனர், பின்பாதியில் நிறைய சம்பவங்களை இணைத்து சுவாரஸ்யப்படுத்தியுள்ளார். என்ன தான் முயன்றிருந்தாலும் கதையமைப்பில் புதுமை இல்லாததால் படம் முடிந்ததும் வெறுமையையே உணர முடிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்