ஜீவா, அறிமுக நாயகி அஞ்சலி, கருணாஸ், அழகம் பெருமாள் நடிப்பில் எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவில் யுவன் சங்கர் ராஜா இசையில் ராம் இயக்கியுள்ள படம். தயாரிப்பு எம்.ஆர் பிலிம் புரொடக்ஷன்ஸ்.
webdunia photo
WD
பிரபாகர் தமிழ் எம்.ஏ. பட்டதாரி. தமிழன் மீது தீராத காதல். எனவேதான ப்ளஸ் டூவில் 1100 மார்க் எடுத்தும் தமிழில் பட்டதாரியாக விரும்புகிறான். தமிழை எந்த அளவுக்கு நேசித்தானோ அந்த அளவுக்கு அவன் நேசித்த இன்னொன்று ஆனந்தி. சிறு வயதிலிருந்து பழகிய தோழமை நட்பாக வளர்ந்து அவனுக்கள் காதலாகி மலர்ந்திருந்தது.
சிறு வயதிலேயே தன் கண் முன்னே ரயிலில் அடிப்பட்ட நாயின் மரணம், தாய்க்கு ஏற்பட்ட விபத்து - கோர மரணம் போன்றவை அவனுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. பிரபாகரின் மனம் பீதியில் நிலை தடுமாறிய போது தோள் கொடுத்து தூக்கி நிறுத்தியவர் அவன் படித்த பள்ளியின் தமிழாசிரியர்.
தமிழார்வம் எம்.ஏ. படிக்க வைத்தது. ஆனால் உயிராய் நேசித்துப் பெற்ற தமிழ் முதுகலைப் பட்டம், பிறர் அவனைக் கேலி செய்யவும், ஏளனம் செய்யவும் பயன்பட்டது. பிறபட்டப் படிப்பு படித்தவர்கள் கை நிறைய சம்பாதிக்கிறபோது தமிழ் படித்த பிரபாகர், சொற்ப சம்பளத்திற்காக கைகட்டி சேவகம் செய்யும் நிலை. நேசித்த ஆனந்தியும் வெகு தூரம் பிரிந்து சென்று விடுகிறார்.
ஒரு கட்டத்தில் கற்ற தமிழும் கை கொடுக்கவில்லை. காதலித்த ஆனந்தியும் கை பிடிக்கவில்லை. இதற்கிடையில் வெவ்வேறு வகையில் அவன் பட்டவை சதா ரணங்கள். விவரிக்க முடிகிற அளவுக்கு சாதாரணங்கள் அல்ல வை. விளைவு... மன அழுத்தம் பீறிட்டு எழ தற்கொலைக்கு முயல்கிறான். தோல்வி....
விளைவு?
மன நோயாளி நிலைக்குத் தள்ளப்பட்டு சட்டத்தைக் கையிலெடுத்துக் கொள்கிறான். தன் போக்கில் குறுக்கிட்டவர்கள், கேலி பேசியவர்கள், துன்புறுத்தியவர்கள் என்று வரிசையாக போட்டுத் தள்ளுகிறான். இதில் கிழிந்த ஐந்து ரூபாய்க்கு ரயில் டிக்கெட் தராதவர் முதல் தன் மேல் பொய்க்கேஸ் போட்டு உள்ளே தள்ளிய போலிஸ் வரை அடக்கம்.
முகத்தில் பெருந்தாடியுடன் பைத்தியம் போலத் திரிந்த பிரபாகர், கலைமகளாக எண்ணி வந்த தன் ஆனந்தியை, ஒரு கட்டத்தில் விலை மகளாகச் சந்திக்க நேர்கிறது. மீட்டுக் கொண்டு அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் சென்று வாழ அவனுக்கு ஆசை. ஆனால் அதுவரை நடந்ததை ஒப்புதல் வாக்கு மூலமாக ஒரு தொலைக்காட்சி பேட்டியாக அவன் கொடுத்துவிடுகிறான்.
ஏதேதோ கதைகள், காரணங்கள் கூறப்பட்டு மூடி மறைக்கப்பட்ட வழக்குகள் உயிர்த்தெழ போலிஸ் பிரபாகரைத் துரத்த, இறுதியில் என்னாகிறது என்பது அதிர்ச்சிகரமான முடிவு.
webdunia photo
WD
முதலில் வழக்கமான சினிமா சூத்திரங்களை வரையறைகளை புறந்தள்ளிவிட்டு புதுமையான முறையில் கதை சொல்ல முயன்றதற்கு இயக்குநர் ராமைப் பாராட்டலாம். சினிமாக் கதாநாயகர்களை அரிதார முகங்களுடன் அவதார புருஷர்களாக சித்தரிப்பவர்களிடையே பட நாயகன் ஜீவா என்கிற இளைஞனை படம் பெரும்பகுதி நீண்ட தாடியுடன் ஒரு நோயாளியைப் போல காட்டியிருக்கிற ராமின் துணிச்சல் பாராட்டுக்குரியது.
இளைஞனாக இருந்து கொண்டு இவ்வளவு கனமான பாத்திரத்தை சுமந்திருக்கிற ஜீவாவின் வலிமை பாராட்டத்தக்கது. பள்ளிப் பருவம் கல்லூரி வயது, பட்டதாரி வாலிபர், தாடி வளர்ந்த பருவம் என ஒவ்வொரு கால கட்டத்திலும் களை கட்டி கவர்க்கிறார் ஜீவா.
யார் அந்த அஞ்சலி? எங்கே பிடித்தார்கள் என்று கேட்கும்படியான எளிமையான பொலிவான தோற்றம். முகத்தில் களை. நடிப்பில் ரகளை. பாவங்களைக் காட்டுவதில் கண்களுடன் மூக்கும் போட்டி போடும் பாங்கு... அட.. நல்லதொரு நாயகி வந்துவிட்டார் பராக்....
தமிழய்யாவாக வரும் அழகம்பெருமாள் அசலய்யா.. அசல் அய்யா....
யுவான் சுவாங்காக வரும் கருணாஸ் நடிக்கும் காட்சி ஓர் அறையில் நடப்பதோடு சரி.. ஆனால் பாவம்... பல பாவங்கள் காட்டும்படியான வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இயக்குநர். கருணாஸ் பெறுகிறார் சபாஷ்+ அப்ளாஸ்.
இயக்குநர் நினைக்கிற ஸ்ருதியில் பாடியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர். தனியறையில் எடுக்கப்பட்ட காட்சியாகட்டும். கதை பயணம் செய்கிற பகுதிகளிலெல்லாம் கல், மண், பாறை, மலை... என பாராது கூடவே வலிக்க வலிக்க சென்றிருக்கிறது கதிரின் கேமரா.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் நம்மை எங்கோ இழுத்துச் செல்கின்றன. பின்னணி இசையிலும் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளார். சமூகம் பற்றிய சில விமர்சனங்களை சமரசத்துக்கு இடமின்றி வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
சில கேள்விகள் விஸ்வரூபமெடுத்தால் வந்த வினைதான் இந்தக் கதை. ஆனாலும் இந்தப் படத்திலும் சில கேள்விகள் எழத்தான் செய்கின்றன.
தமிழ் எம்.ஏ. படித்தவன் சமூகத்தில் புறக்கணிக்கப்படும் நிலை நிஜத்தில் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறது. ஒப்புக் கொள்வோம். ஆனால் நாயகன் பிரபாகர் தமிழ் எம்.ஏ. படித்ததால்தான் அவ்வளவு பிரச்சினையும் என்று நினைக்க முடியாது. கற்றது தமிழ் தலைப்புக்கேற்ற அழுத்தம் கதையில் கொடுக்கப்படவில்லை. இது ஓர் உறுத்தல்.
புதுமை, புரட்சி, பரபரப்பு, யதார்த்தம் என்கிற பெயரில் சினிமாவில் ஆபாசத்தைத் திணிக்க வழி தேடுவோர் மத்தியில் ராம், ஆபாசத்தைக் கையாளாமல் கதை சொல்லியிருப்பது ஆறுதல். ஆனாலும் படம் பற்றி ஒரு கவலை...
காட்சிக்குக் காட்சி பரபரப்பு வைத்து கதை சொல்லப்பட்ட சினிமாவில் கதையை அதன் போக்கில் பயணம் செய்ய அனுமதித்திருக்கிற இயக்குநரின் முயற்சி விமர்சனம் செய்யப்படக் கூடும். ஆனால் ஒப்பனை முகங்களையே பார்த்துப் பழகிய நமக்கு ஒரிஜினல் முகம் ரசிக்கப் பிடிக்குமா?