பார்த்திபன், பாரதி, சாதனா, அபிஷேக், ராஜஷ்ரீ, மகாதேவன் நடிப்பில் எம்.எஸ். பிரபுவின் ஒளிப்பதிவில் சபேஷ் முரளியின் இசையில் பத்மாமகன் இயக்கியுள்ள படம். ரூபஸ் பார்கர் தயாரித்துள்ளார்.
பாலியல் தொழிலாளிக்கு நாயகனில் அன்று வாழ்க்கை கொடுத்தார் வேலு நாயக்கர். சரண்யா மீது அன்று நாயக்கர் கமல் கொண்ட அனுதாபம், காதலாகி மனைவி இடம் கொடுக்கச் செய்தது. நாயகன் படத்தில் ஒரு சிறு பகுதி இது.
அப்படிப்பட்ட ஒரு பாலியல் தொழிலாளியின் வலிகளை வலிமையுடன் விரிவாகச் சொல்லியிருக்கும் படம்தான் அம்முவாகிய நான். படத்தலைப்பே சமுதாயத்திற்கு இதுதான் என் கதை. இதில் ஒளிவுமறைவு இல்லை என்று சத்தியப்பிரமாணம் செய்வது போல் உள்ளது.
அவனுக்கோ காமப்பசி. அவளுக்கோ வயிற்றுப்பசி. அவன் கரன்சியை விரித்தான். அவள் படுக்கையை விரித்தாள். இப்படித்தான் இருக்கும் ஒரு பாலியல் தொழிலாளிக்கும் வாடிக்கையாளருக்குமான உறவு. காமம், லாபம் பரிவர்த்தனைக்குள் காதலுக்கு இடமேது? கரன்சி முன்மொழிய காமம் வழிமொழிய காதல் அரங்கேறுமா? காமம் தணிக்க வந்தவனிடம் பணப் பரிமாற்றம் நடக்கலாம். மனப் பரிமாற்றம் சாத்தியமா?
வாடிக்கையாளனாக வந்த ஒருவனிடமிருந்து வாழ்க்கை கிடைக்குமா? இவை அனைத்தும் சாத்தியம் என்று சத்தியம் செய்கிறார் இயக்குநர் பத்மாமகன்.
webdunia photo
WD
பார்த்திபன் ஓர் எழுத்தாளர். பாரதி பாலியல் தொழிலாளி. பார்த்திபனுக்கு தன் எழுத்துக்கு விருது கிடைக்க வேண்டுமென்று ஏக்கம். இருமுறை கை நழுவிப் போகிறது. இம்முறை விடக் கூடாது என்று பாரதியின் வாழ்க்கையை எழுத்தாக்குகிறார் விருது கிடைத்திடும் நிலை அதற்கு வைக்கப்படுகிறது ஒரு விலை. அதுதான் பாரதியின் கற்பு. விருதுக்குத் தேர்வு செய்யும் உயர் மட்டக் குழுவிலிருக்கும் அதிகாரி மகாதேவன், பாரதியை அடைய விரும்புகிறார். பாரதியை விருந்து வைத்தால் பார்த்திபனுக்கு விருது... என்ற முடிச்சுடன் நிமிர்ந்து நிற்கிறது கதை. முடிவு என்ன என்பதே உணர்ச்சிகரமான உச்சக்கட்டக் காட்சி.
இந்தக் கொலையை நான்தான் செய்தேன் என்கிற வாக்கு மூலத்துடன் படம் தொடங்குகிறது. அடுத்தடுத்து வரும் காட்சிகள் இது வரிசையாக வரும் வணிகப் படங்களின் பட்டியலில் சேர்க்க முடியாத படம் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன.
மனதால் அன்றாடம் செத்துப் பிழைக்கிற பாலியல் தொழிலாளியின் வலியை அழகாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
பெண்களை வரிசையில் நிற்க வைத்து தனக்குப் பிடித்தவர்களை வாடிக்கையாளர்கள் அழைத்துச் செல்லும் போது சிறுமி பாரதி, "அம்மா நானும் வரிசையில் நின்னேன். ஒருத்தர் கூட என்னை விளையாட்டுல சேத்துக்கலை" என்கிற போது அந்த அப்பாவித்தனம் நம்மை வலிக்க வைக்கிறது.
webdunia photo
WD
ஒரு வாடிக்கையாளராக வரும் பார்த்திபன், தொழிலாளியாக வரும் பாரதியிடம் 'டிரஸ் போட்டுக்கிட்டு வா' என்கிறபோது கதையை கண்ணியப்படுத்தும் இயக்குநரின் கரிசனம் புரிகிறது.
பார்த்திபன் - பாரதி திருமணம் முடிந்து பரஸ்பரம் ஆரத்தி எடுத்துக் கொள்வது ரசம். முதலிரவுக் காட்சியில் 'இன்னிக்குத்தான் நீ ராணி மடத்துக்கு வர... எந்த ராத்திரியிலும் நான் தனியா தூங்கினதே இல்லை' என்று பாரதி கூறும்போது... ஒரு விபச்சாரியின் கல்லறையில் எழுதப்பட்டிருந்தது. இங்கு மட்டும் தான் இவள் தனியாக உறங்குகிறாள் என்கிற கவிதை நினைவுக்கு வருகிறது.
எழுத்தாளர் கெளரிசங்கரும் அபலைப் பெண் அம்முவும் நல்ல பாத்திரப் படைப்புகள்.
கவர்ச்சிக்கும், ஆபாசத்துக்கும் வாய்ப்புள்ள ஒரு கதையமைப்பில் கண்ணியமாகச் சொல்லி திரை ரசனையைக் கெளரவப்படுத்தியுள்ளார் இயக்குநர். ஆனால் நடந்து முடிந்த கொலையின் பின்னணி, காரணத்தைக் கூறாமல் பார்த்திபன் பாரதியுடன் விருது விழாவில் கலந்து கொள்வது சற்றே நெருடுகிறது.
செ. சுருளிராசனின் சுளீர் வசனங்களும், சபேஷ் முரளியின் இனிய இசையும் படத்திற்குப் பலம் சேர்க்கின்றன. எம்.எஸ். பிரபுவின் கேமரா பல இடங்களில் எழுதா வசனங்களைப் பேசுகிறது. மொத்தத்தில் வழக்கமான பாதையைவிட்டு விலகி நின்று சிந்தித்த இயக்குநர் பத்மாமகன் பாராட்டுக்குரியவரே.