பச்சைக்கிளி முத்துச்சரம் - விமர்சனம்

சரத்குமார், ஜோதிகா, ஆண்ட்ரியா, மிலிண்ட் சோமன் நடித்து கௌதம் இயக்கியுள்ள படம். இசை ஹாரிஸஜெயராஜ், ஒளிப்பதிவு அரவிந்த் கிருஷ்ணா, தயாரிப்பு ஆஸ்கார் வி. ரவிச்சந்திரன்.

"பச்சைக்கிளி" போல அழகும் காதலும் நிறைந்த மனைவி. தானுண்டு தன் வேலை உண்டு குடும்பம், மனைவி அழகான பிள்ளை என "முத்துச்சரம்" போன்ற சிக்கல் இல்லாத வாழ்க்கை. இப்படித்தான் ஆரம்பிக்கிறது வெங்கடேஷின் கதை.

தெளிந்த நீரோடை போல எழுச்சியும் வீழ்ச்சியும் இல்லாத இதமான வாழ்க்கை. காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம் என்று இருக்கிற குடும்ப வாழ்க்கை, இனிப்பாக இருக்கிறது. இப்படிச் சொல்கிற வாழ்க்கையில் ஒருத்தி குறுக்கிடுகிறாள் அவள்தான் கீதா. ஒரு துரும்பைப் போல் வெங்கடேஷுக்குள் புகுந்து தூணாக வளர்ந்து அவனது வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறாள். இன்னொரு காதலி என்கிற இலகுவான கட்டத்தில் அவளை வைத்து விடாதீர்கள்.

ஒரு சின்ன சம்பவம் வெங்கடேஷின் மொத்த வாழ்க்கையையும் குழி பறித்து குப்புறத் தள்ளி விடுகிறது. கொன்று புதைக்கவும் தயாராக இருக்கிறது. இதிலிருந்து வெங்கடேஷ் மீள்கிறானா என்பதுதான் "பச்சைக்கிளி முத்துச்சரம்" கதையின் முடிவு. இதையே பல சுவையான திருப்பங்களுடன் கதையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் கௌதம்.

வெங்கடேஷாக சரத்குமார். மனைவி கல்யாணியாக ஆண்ட்ரியா. கீதாவாக ஜோதிகா. வில்லன் லாரன்ஸாக மிலிண்ட் சேர்மன். இந்த நால்வர் அணிக்குள் நடிப்பில் போட்டி.

ஆர்ப்பாட்டமும் அலட்டலும் இல்லாமல் நடித்து சரத் அசத்தியிருக்கிறார். வழக்கமான ஆக்ஷன் ஹீரோ என்கிற சரத்தை இதில் காண முடியாதது பெரிய ஆறுதல். ஆண்ட்ரியா அறிமுகம் என்கிறார்கள். சத்தியமாக நம்ப முடியவில்லை. பாந்தமான மனைவியாக வந்து பார்ப்பவர்களை கவர்ந்து விடுகிறார். காதலையும் சரி வெறுப்புணர்வையும் சரி வெளிப்படுத்துவதில் அமைதிப் புரட்சியே ஆண்ட்ரியா ஸ்டைல். கீதாவாக வரும் ஜோதிகாவுக்கு நடிப்பில் பல நிறங்களைக் காட்டும் வாய்ப்பு.

காதலை, காமத்தை, வஞ்சத்தை, ஆவேசத்தை, பரிதாபத்தை என அனைத்தையுமே தன் பாத்திரத்தில் பதிவு செய்து விட்டுப் போய் விடுகிறார். ஜோதிகாவின் நடிப்பு ஜோர். இனி இவர் ஜோர்திகா. கண்களால் பேசி கடைவாயால் சிரித்து வில்லத்தனம் செய்திருக்கும் மிலிண்ட் சோமன் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. நட்சத்திரத் தேர்வை சரியாகச் செய்து அளவான அழகான நடிப்பை வெளிக்கொண்டு வந்துள்ள இயக்குனரின் திறமையைப் பாராட்டலாம்.

அதிகம் பேசாமல் மௌனங்கள் மூலமே சலனங்களைப் பதிவு செய்து காட்டியிருக்கிறார். நிஜத்தில் படத்தில் இப்படி ஓசையின்றி பேச்சுக்கு வேலையின்றி நகரும் காட்சிகளே பேசப்படும் படியாக உள்ளன எனலாம்.

இப்போது தாங்கள் விரும்பிய வன்முறைக் காட்சிகளை நியாயப்படுத்த குடும்பக் கதைத் துணுக்குகளை இணைப்பது வழக்கமாகி வருகிறது. கௌதம் இதில் சேரவில்லை. ஆழமான அகலமான ஒரு குடும்பக் கதையை எடுத்துக் கொண்டு அதையே ஆணிவேராகவும் அடி மரமாகவும் வைத்துள்ளார். ஆதரவுக்கு மட்டுமே வன்முறையை வைத்துள்ளார். அது சல்லிவேரின் சதவிகிதம் போன்றது.

வாழ்க்கையில் பயணம் ஆபத்தானது என்பர். ஆனால் வாழ்க்கைப் பாதையே ஆபத்து நிறைந்தது என்று யதார்த்தம், விறுவிறுப்பு, பரபரப்பு, திகில் கலந்து காட்டியிருக்கிறார் இயக்குனர்.

படத்தில் இயக்குனருடன் சரியான அலைவரிசைத் தோழர்களாக இருவர். ஒருவர் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா, அனைவரையுமே அழகாகக் காட்டியிருக்கும் அவரது ரசிக்க வைக்கிறது. இன்னொருவர் ஹாரிஸஜெயராஜ். அளவான இசை. இதமான பின்னணி இசை. "உனக்கும் நானே", "காதல் கொஞ்சம்" பாடல்கள் இதமாய் இருக்கின்றன. கதையை இழையாய் இடரின்றி சொல்லும் அந்தோணியின் படத்தொகுப்பும் பாராட்டுக்குரியதுதான்.

மொத்தத்தில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சில "பச்சை"க் காட்சிகளை தவிர்த்து விட்டுப் பார்த்தால் தரமான முயற்சி என்றே கூறலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்