எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி பல வருடங்களுக்கு முன் மிகப்பெரிய வெற்றியடைந்த 'நினைத்ததை முடிப்பவன்' என்ற பெயரில் தற்போது உருவாகி வரும் புதிய படத்தில் ஜெய்ஆகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில், நேர்மையான சி.பி.ஐ அதிகாரியாக நடிக்கிறார் ஜெய்ஆகாஷ். கதை, திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார். எம்.கே. தியாகராஜன். திரைப்படக்கல்லூரி மாணவரான இவர், ஏவிஎம் தயாரிப்பில் விஜயகாந்த் நடித்த `மாநகர காவல்', பிரபு நடித்த `வெற்றி மேல் வெற்றி' போன்ற படங்களை இயக்கியவர்.
ஸ்ரீ சாய்கணேஷ் புரடக்ஷன்ஸ் சார்பில் கே.ராமாஞ்ஜநேயுலு மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் `நினைத்ததை முடிப்பவன்' படத்தில் ஜெய்ஆகாஷ் ஜோடியாக கீர்த்திசாவ்லா நடிக்கிறார்.
மற்றும் ஐஸ்வர்யா, ரியாஸ்கான், காஸ்ட்யூம் கிருஷ்ணா, தளபதி தினேஷ் ஆகியோருடன் மேலும் பல முன்னணி கலைஞர்களும் நடிக்கிறார்கள்.
சில வருடங்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் நுழைந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அண்மையில் சென்னையில் உள்ள காசிமேடு கடற்கரையில் ஆயிரக்கணக்கான படகுகள் மத்தியில், தீவிரவாதிகள் தலைவனான ரியாஸ்கான், அன்னிய நாட்டிலிருந்து இந்தியாவுக்குள் நுழையும் தீவிரவாதிகள் சந்திப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இக்காட்சி தவிர வேறு சில காட்சிகளும் படமாக்கப்பட்டன.
பரபரப்பான அண்ணாசாலையில் ஸ்பென்ஸர் சிக்னலில் காவல்துறையினர் வாகன சோதனை செய்வது போன்ற காட்சியும் படமாக்கப்பட்டது.
`நினைத்ததை முடிப்பவன்' படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு சென்னை, நெல்லூர் போன்ற இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெறவிருக்கிறது. டெல்லியில் இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்திராத நாடாளுமன்றத்தில் இந்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார் இயக்குனர் தியாகராஜன். தவிர, டெல்லியில் இரண்டு பாடல்காட்சிகளும் படமாக்காப்படவிருக்கிறது.
`நினைத்ததை முடிப்பவன்' படம் பரபரப்பான ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.