உற்சாகம், பக்குவம், தெளிவு, நிதானம் இவற்றின் கலவையாக இருக்கிறார் அஜீத். அண்மையில் மீடியாவை சந்தித்து மனம் திறந்தார்.
'பில்லா' எல்லா வகையிலும் நல்லா வந்திருப்பதால் உற்சாகத்துடன் கேள்விகளை எதிர்கொண்டார். பேச ஆரம்பித்ததும் மீடியாவுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி கூறினார்.
நான் எதுக்கு நன்றி சொல்றேன்னா அதுக்கு காரணமிருக்கு. பேச்சுக்காக சொல்லப்படறதில்லை இது. நான் கடந்த ரெண்டு வருஷமா ரொம்ப கஷ்டத்தில் இருந்தேன். அப்போ எனக்கு நம்பிக்கையும் ஆதரவும் கொடுத்து என்னை உற்சாகப்படுத்தினது ரசிகர்களும் மீடியாவும்தான். அதுக்காக நான் ரொம்ப நன்றி கடன் பட்டிருக்கேன் என்று தொடங்கியவுடன் `பில்லா' பற்றி பேச்சு திரும்பியது.
`பில்லா' அனுபவம் பற்றி...
பில்லா வெளியாகியிருக்கு. படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. இந்த ஐடியா தோன்றியதுமே ரஜினி சார்கிட்டே பர்மிஷன் கேட்டோம். சந்தோஷமா சம்மதம் சொன்னார். படத்துக்காக மலேஷியாவில் 70 நாள் ஷுட்டிங் பண்ணினோம். டைரக்டர் விஷ்ணுவர்தன் கடுமையான உழைப்பாளி. நல்லவிதமா பண்ணியிருக்கார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை புது 'பில்லா' நிறைவேற்றுமா?
முடிந்தவரை கடுமையாக உழைச்சிருக்கோம். எதிர்பார்ப்பு எப்படி... எந்த அளவுக்கு பூர்த்தி செய்து இருக்குன்ற விஷயமெல்லாம் படம் பார்த்து நீங்க தான் சொல்லணும்.
ரஜினியின் படத்தை ரீமேக் செய்திருப்பது அடுத்த சூப்பர்ஸ்டார் ஆகும் முயற்சியா?
webdunia photo
WD
ரஜினிசார் சூப்பர்ஸ்டார். ரஜினிசார், கமல்சார் எல்லாம் ரோல் மாடல்ஸ். ரீமேக்ங்கிற விஷயம் இப்ப பேசறாங்க. நான் மூணு வருஷத்துக்கு முன்னாடியே சொன்ன விஷயம். ரஜினிசார் சம்மதத்துடன் ஆசீர்வாதத்துடன் இந்தப் படம் வளர்ந்திருக்கு. மற்றபடி தவறான ஒப்பீடுகள் செய்யக்கூடாது.
அவ்வளவு சுலபமா சொல்லிட முடியாது. ரீமேக் ஈஸியான விஷயம் கிடையாது. அதை `பில்லா' பார்த்து புரிஞ்சுக்குவீங்க. இதிலும் எவ்வளவோ கிரியேட்டிவிட்டி இருக்கு. இது ஒரு சவாலான விஷயம். பேசப்பட்ட படத்தை மறுபடி எடுக்கிறப்போ ஒப்பிட்டு பேசப்படும். இன்று உள்ள காலகட்டத்துக்கு ஏற்ற இசை வேணும். 'பில்லா'வுக்காக நிறைய பலவகையில் வரவேற்புக்குரியதா இருக்கு. 'தொட்டால் பூ மலரும்' பாட்டு எஸ்.ஜே.சூர்யா பயன்படுத்தியபோதே அதுக்கு எவ்வளவு வரவேற்பு கிடைச்சுது... 'நான் அவனில்லை' படம் கூட நல்லா கமர்ஷியல் ஹிட் ஆனது. இந்தியிலும் கூட 'டான்' ரீமேக் செஞ்சு கமர்ஷியல் ஹிட்.
ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் பற்றி?
அவர் பெயர் ஓரங்ஜி. அவர் ஜாக்கிசான் படங்களில் ஒர்க் பண்ணியிருக்கார். எத்தனையோ மாஸ்டர்கிட்டே பண்ணியிருக்கேன். அவர்கிட்டே ஒர்க் பண்ணினது வித்தியாசமான அனுபவம். அது என்னன்னு படம் பார்த்து தெரிஞ்சுக்குவீங்க.
விஜய்யை சந்தித்த பிறகு உங்களுக்குள் இருந்த விரோதம் முடிவுக்கு வந்துவிட்டதா?
எங்களுக்குள் விரோதமும் இல்லை. பகையும் இல்லை. விஜய் என் எதிரி இல்லை. நண்பர்தான். எங்களுக்குள் போட்டி உண்டு. எங்களுக்குள் நிச்சயமா போட்டி இருக்கு. பகையில்லை.
ரஜினி-கமல்போல, விஜய்-அஜீத் இருவரும் சேர்ந்து நடிக்கும் எண்ணம் இருக்கிறதா?
webdunia photo
WD
நாங்க சேர்ந்து 'ராஜாவின் பார்வையிலே'ங்கிற படத்துல நடிச்சிருக்கோம். 'நேருக்கு நேர்' படத்துல கூட நடிக்கிறதா இருந்திச்சு. ஆனா அமையல. இப்ப ரெண்டு பேரும் வளர்ந்திருக்கோம். அதுக்கு இப்ப அவசியமில்லை. ஏன்னா விஜய் ஒரு படம் நடிச்சா அதில் ஆயிரம் குடும்பத்துக்கு வேலை கிடைக்கும். நான் ஒரு படம் நடிச்சா அதுல ஆயிரம் குடும்பம் சந்தோஷப்படும். ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சாலும் அதே ஆயிரம் குடும்பத்துக்குத்தான் வேலைவாய்ப்பு. அதனால்தான் இது தேவையில்லைன்னு சொல்றேன்.
அடுத்த படம்... எப்போது?
அடுத்த படம் ஐங்கரன் பிலிம்ஸுக்கு பண்றேன். டைரக்ஷன் ராஜுசுந்தரம்.
ரசிகர்களைச் சந்திப்பதற்கு நேரம் எப்படி ஒதுக்குகிறீர்கள்...?
முடிந்தவரை நேரம் ஒதுக்கி குரூப் குரூப்பாக போட்டோ எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்து இருக்கிறோம். ரசிகர்கள் என்மேல் காட்டுற அன்பு அக்கரை எந்தவித பிரதிபலனும் பாராதது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது.
இருந்தாலும் முன்புபோல ரசிகர்களை சந்திப்பதிலை என்ற வருத்தம் ரசிகர்களிடம் இருக்கிறதே?
நான் ஒரு தனிமை விரும்பி. எனக்கும் கஷ்டங்கள் இருக்கும். பிரச்சினை இருக்கும். தனிமை தேவைப்படும். எனக்கும் ப்ரைவசி வேணும். ரசிகர்களின் அன்பை மதிக்கிறேன். ஆனா அவங்களுக்கும் நேரம் முக்கியம். எனக்காக நேரத்தை வீணடிக்கக் கூடாது. எல்லாரையும் என்னால சந்தோஷப்படுத்த முடியாது. ரசிகர்களுக்கு என்னைக்கும் நான் சொல்றது நேரத்தை வீண்டிக்கக் கூடாது. ஏன்னா நேரம் என்பது விலை மதிப்பற்றது.
விருதைக் குறிவைத்துப் படமெடுக்கும் எண்ணம் உண்டா?
அப்படி எதுவும் இல்லை. அவார்டுக்குன்னு படம் எடுத்தா தப்பாய்டும். பொழுதுபோக்கிற்காக படம் எடுக்கிறாங்க. நான் கமர்ஷியல் வெற்றியைத்தான் முக்கியமா பார்ப்பேன். அப்படிப்பட்ட படங்களில் நடிக்கவே விரும்பறேன்.
இவ்வளவு நிதானமாகப் பேசுவதன் காரணம் என்ன?
பக்குவம்தான். இப்போ எனக்கு 36 வயசு ஆகுது. நானும் மெச்சூர்டாய்ட்டு வர்றேன். வயதும் ஒரு காரணம். இன்னும் பத்து வருஷம் கழிச்சு இன்னும் மெச்சூர்டா பேசுவேன். வயது ஏற ஏற பக்குவமும் தானா வந்திடும்.
அப்பாவாகப் போகிறீர்கள் எந்தக் குழந்தை வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
webdunia photo
WD
அம்மாவும் பிள்ளையும் ஆரோக்யமா இருந்தா போதும். ஆரோக்கியமான குழந்தை வேணும்னு நினைக்கிறேன்.