குழந்தைகளை தத்தெடுக்கும் கமல்

செவ்வாய், 1 டிசம்பர் 2009 (15:48 IST)
இன்று உலக எய்ட்ஸ் தினம். இந்த தினத்தை முன்னிட்டு பெற்றால்தான் பிள்ளையா என்ற பெய‌ரில் ஒருமாத கால பிரச்சார இயக்கத்தை பிஎஸ்ஐ என்ற அமைப்பும், ஹலோ எப்எம்-மும் நடத்தவிருக்கிறது. இந்த பிரச்சார இயக்கத்துக்கு தலைமையேற்றிருப்பவர், நடிகர் கமல்ஹாசன்.

ஹெச்ஐவி, எய்ட்ஸால் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் குழந்தைகள். இந்த வருடம் மட்டும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்தியாவில் புதிதாக எய்ட்ஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை சமூகம் தள்ளி வைக்கும் அவலமே இன்றும் நீடிக்கிறது.

இது தவறு என்று உணர்த்தவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாகவும் பெற்றால்தான் பிள்ளையா பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. ஒருமாத காலம் நீடிக்கும் இந்த இயக்கம் மக்களிடம் ஹெச்ஐவி, எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

மேலும் ஒவ்வொரு தனி மனித‌ரிடமிருந்தும் ரூபாய் 750 நன்கொடை பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சுகாதார காப்பீட்டுக்குப் பயன்படுத்தப்படும்.

இந்த பிரச்சார இயக்கத்துக்கு தலைமை ஏற்றிருக்கும் கமல் இதுபற்றி கூறுகையில், ‘குழந்தைகள்தான் நமது எதிர்காலம். ஆனால் அவர்களில் சிலர் நம்பிக்கையின்மையின் பிடியில் சிக்கியிருப்பது கவலைப்பட வேண்டிய விஷயம். அவர்களுக்கு நம்பிக்கையும், மகிழ்ச்சியும் அளிப்பது ஒவ்வொருவ‌ரின் கடமை’ என்றார்.

ஹெச்ஐவி, எய்ட்ஸால் பாதித்த ஆயிரம் குழந்தைகளை தத்தெடுக்கவும் முன் வந்திருக்கிறார் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்