உன்னைப்போல் ஒருவன் - கிராண்ட் ஓபனிங்

சனி, 19 செப்டம்பர் 2009 (15:52 IST)
17 ஆம் தேதி காலவரை உன்னைப்போல் ஒருவன் வெளியாகும் என்று யாருக்கும் உறுதியில்லை. படத்தை வெளியிட தடையில்லை என்று நீதிபதி தீர்ப்பு கூறிய பிறகே அனைவருக்கும் நிம்மதி திரும்பியது.

தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் கமலின் புதிய படம் வெளியாகியிருக்கிறது. படத்தில் மோகன்லாலும் இருப்பதால் கேரளாவிலும் திருவிழா கொண்டாட்டம். அமெ‌ரிக்காவில் உன்னைப்போல் ஒருவன் அனேகமாக எல்லா மாநிலங்களிலும் வெளியாகியுள்ளது. ஆன் லைன் ‌ரிசர்வேசஷன் கமலின் மற்ற படங்களின் சாதனையை முறியடித்திருக்கிறது.

சென்னையில் மட்டும் 16 திரையரங்குகளில் படத்தை வெளியிட்டுள்ளார், சென்னை மாநகர விநியோக உ‌ரிமையை வாங்கியிருக்கும் அபிராமி ராமநாதன். முதல் நாளான நேற்று படம் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் போர்டு தொங்கியது. பல திரையரங்குகளில் சனி, ஞாயிறு இரு தினங்களுக்கான முன்பதிவு முடிந்துவிட்டது.

தமிழ்நாடு முழுவதும் பட வெளியீட்டை கமல் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். வழக்கமான பாலபிஷேகம், பட்டாசு வெடிப்பது என்று திரையரங்குகள் களை கட்டின.

கமல் இதுவரை நடித்த படங்களின் பத்தி‌ரிகை விளம்பரங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர் அனைவரையும் கவர்ந்தது. உதயம் திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த இந்த போஸ்ட‌ரில், மரோச‌ரித்ரா படத்தின் 500வது நாள் பத்தி‌ரிகை விளம்பரம் உள்பட பல பழைய படங்களின் 100 நாள், 25வது வாரம் விளம்பரங்களையும் பார்க்க முடிந்தது.

படத்தில் வரும் ஆங்கில பிரயோகம், பாடல், சண்டைக் காட்சிகள் இல்லாதது பி.சி. சென்டர்களை சென்றடையுமா என்ற கேள்வியும் உள்ளது.

வெளியான பத்து தினங்களுக்குள் படம் போட்ட பணத்தை வசூலித்துவிடும் என நம்பிக்கையாக கூறுகிறார்கள் விநியோகஸ்தர்கள். பணம் முதலீடு செய்தவர்களுக்கு அதுதானே வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்