இந்திப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை மீண்டும் தூசு தட்டியிருக்கிறார், எஸ்.ஜே. சூர்யா. பல காலமாக சொல்லிவரும் தனது இசை என்ற யூனிவர்சல் சப்ஜெக்டை விரைவில் இந்தியில் இயக்கி நடிக்கப் போகிறாராம்.
வெற்றிகரமான இயக்குனராக அறியப்பட்ட சூர்யா தனது நடிப்பு ஆசையால் தடம் மாறியது தெரிந்த விஷயம். ஆனால் அது தடம் மாறியது அல்ல, என்னுடைய விருப்பமே, லட்சியமே நம்பர் ஒன் ஹீரோவாவதுதான் என்று கூறி திகைக்க வைத்துள்ளார்.
தற்போது பவன் கல்யாணை வைத்து தெலுங்கில் புலி படத்தை இயக்கி வருகிறவர், அந்தப் படத்தை தமிழில் இயக்கி தானே நடிக்கவுள்ளார். புலிக்குப் பிறகு இசை என்ற படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இயக்கி நடிக்க திட்டமிட்டுள்ளார்.
இந்திப் படவுலகம் சூர்யாவுக்கு புதிதல்ல. தனது குஷி படத்தை கரீனா கபூர் நடிப்பில் ஏற்கனவே இயக்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கில் வெற்றி பெற்ற குஷி இந்தியில் ப்ளாப்பானது எதிர்பாராத சோகம்.
சூர்யாவின் சிஷ்யர் ஏ.ஆர். முருகதாஸ் இந்தியில் கஜினி மூலம் பட்டையை கிளப்பியிருப்பதுதான் சூர்யா தனது பாலிவுட் கனவை துரிதப்படுத்த காரணம் என்கிறார்கள்.