மகன் விஜய சிரஞ்சீவியை சூர்யா படத்தின் முலம் கலைத்துறைக்கு அர்ப்பணித்த ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்தின் அடுத்த அதிரடி, இந்தியன்.
சூர்யா வணிக ரீதியாக சுமார் என்றாலும், ஆக்ஷன் காட்சிகளால் விஜய சிரஞ்சீவிக்கு நல்ல பெயர். உலகின் அனைத்து இடங்களிலிருந்தும் மகனுக்கு வாழ்த்துகள் குவிவதாக பூரிக்கிறார், ஜாக்குவார். அதே சூட்டுடன் அடுத்தப் படத்தை தயாரித்து, இயக்கி வெளியிட முடிவு செய்துள்ளார்.
புதிய படத்தின் பெயர், இந்தியன். ஷங்கரின் இந்தியனுக்கும் இதற்கும் கதை ரீதியாக எந்த ஒற்றுமையும் கிடையாது என்றாலும் இதுவும் தேசபக்தியை ஊட்டும் படம்தானாம்.
ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு வாழ்வளித்த தேசபக்தி, அவரைப் போலவே அடிதடியில் தனி ஆவர்த்தனம் காட்டும் விஜய சிரஞ்சீவிக்கும் கை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.