நட்பு நாடும் இயக்குனர் - வேண்டாமெனும் இசையமைப்பாளர்
செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:31 IST)
கெளதம் வாசுதேவ் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி சினிமா வட்டாரத்தில் மிகவும் ஒரு எதிர்பார்ப்பை உண்டு பண்ணியது.
வித்தியாசமான கதை, அசத்தலான இசை என்று கலக்கிக் கொண்டிருக்க, திடீரென்று இருவருக்கும் மனத்தாங்கல் ஏற்பட, வாரணம் ஆயிரம் படத்திற்குப் பின் இருவரும் பிரிந்துவிட்டார்கள்.
இந்தப் பிரிவை முதலில் சொன்னது ஹாரிஸ் ஜெயராஜ். கஷ்டப்பட்டு உழைத்து அற்புதமான டியூன்களைப் போட்டுக் கொடுத்தாலும், அந்த பாடல்களுக்கு தகுந்த தரமான படமாய் எடுக்கவில்லை என்பதுதான் ஹாரிஸின் குற்றச்சாட்டு. இதை வெளிப்படையாக கெளதமிடமே சொல்ல... அப்படியானால் என் படத்துக்கு இனிமேல் உங்கள் இசை இல்லை என்று சொல்லிவிட்டார்.
அதன்பின் சில நண்பர்கள், உன் படங்களுக்கு மிகப்பெரிய பலமே ஹாரிஸின் இசைதான் என்று சொல்ல... தூதுவிட்டு சமாதானப்படுத்தியும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார் ஹாரிஸ் ஜெயராஜ். அதனால்தான் அடுத்து அல்லு அர்ஜுன் என்ற தெலுங்கு ஹீரோவை வைத்து ஒரு படம் இயக்குகிறார்.
தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் 'சென்னையில் ஒரு மழைக்காலம்' படத்திற்குப் பின் 'சுறா' என்ற படத்தையும் இயக்குகிறார். நல்ல இசை வேண்டும் என்பதற்காக தற்போது ஏ.ஆர். ரஹ்மானை நாடி வருகிறார் கெளதம்.