ரெடிமேடாக இருக்கும் இசைக் கோவையை விலைக்கு வாங்கி படத்தின் காட்சிகளுக்கேற்ப பயன்படுத்துவதுதான் இப்போது லேட்டஸ்ட் பேஷன். இந்த இசை விற்பனையில் முன்னணியில் இருக்கிறது, தமிழரான லேகா ரத்னகுமாரின் லேகா சொனாட்டோன் நிறுவனம்.
இவரது நிறுவனத்தில் எண்ணற்ற இசை கோவைகள் உள்ளன. இதனை பயன்படுத்தி தனது புதிய வார்ப்புகள் படத்தின் பின்னணி இசையை இரண்டே நாட்களில் முடித்துள்ளார், பாக்யராஜ்.
தமிழுக்கு இது புதுசு என்றாலும் ஹாலிவுட்டுக்கு இது பழசு. இன்சைட்மேன் என்ற படத்தின் டைட்டில் காட்சிக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த உயிரே படத்தில் இடம்பெறும் சைய சையா பாடலின் இசையை முறைப்படி வாங்கி பயன்படுத்தியிருந்தனர்.
சமீபத்தில் பல்கேரியா சென்ற லேகா ரத்னகுமார், ஆக்சன் படங்களுக்கு பயன்படும் இசைக் கோவைகளை அங்குள்ள இசைக் கலைஞர்களை வைத்து பதிவு செய்துள்ளார். இந்த இசையை தனது 1977 படத்தின் ட்ரெய்லருக்கு பயன்படுத்த உள்ளார், படத்தின் இயக்குனர் தினேஷ்.
இந்த புதிய இசை கலாச்சாரம் விரைவில் கோலிவுட்டை ஆக்கிரமிக்கும் என்பதில் சந்தேகமில்லை.