தமிழ் ரசிகர்களுக்கு ஹாலிவுட் ஆக்ஷன் படங்களைவிட, மார்ஷியல் ஆர்ட் படங்கள் மீதுதான் ப்ரியம். ஜாக்கிசானின் பார்பிடன் கிங்டம் வெளியான போதுதான் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க்கின் புகழ்பெற்ற இண்டியானா ஜோன்ஸ் சீரிஸின் நான்காம் பாகம் வெளியானது. உலகம் முழுவதும் இண்டியானா ஜோன்ஸ் வசூலில் பட்டையை கிளப்ப, இந்தியாவில் மட்டும் பார்பிடன் கிங்டம் முதலிடத்தை பிடித்தது.
இந்திய ரசிகர்களின் இந்த மார்ஷியல் ஆர்ட் மோகத்தை சரியாக புரிந்து கொண்ட தயாரிப்பாளர்கள் ஹாலிவுட் படங்களில் மார்ஷியல் ஆர்ட்டுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் பிராந்திய மொழிகளில் டப்பிங் செய்கின்றனர். அப்படி தமிழில் சமீபத்தில் வெளியான படம், ஜாசன் ஸ்டத்தம் நடித்த ட்ரான்ஸ்போர்ட்டர்.
சண்டைக் காட்சிகள் நிறைந்த இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து அவரின் இன்னொரு படமான க்ராங்க்கை தமிழில் டப் செய்து வெளியிடுகின்றனர். போதை மருந்துக்கு அடிமையாக்கப்பட்ட ஸ்டத்தம், போதையின் அளவு குறையும்போது மரணத்தை நோக்கி தள்ளப்படுகிறார்.
இந்த ஜீவ மரண போராட்டத்துக்கு நடுவில் அவர் எப்படி எதிரிகளை அழிக்கிறார் என்பதை இதுவரை பார்க்காத அளவுக்கு எக்ஸ்ட்ரா ஸ்பீடில் எடுத்திருக்கிறார்கள். இங்கு ஸ்பீட் என்று சொல்வது படத்தின் பாஸ்ட் எடிட்டிங்கை.
போதை தெளியும் நேரம் இதயம் அதிவேகமாக துடிப்பதை கட்டுப்படுத்த, தனது கேர்ள் ப்ரெண்டுடன் ஸ்டத்தம் நடுத் தெருவில் பல நூறு ஜனங்களுக்கு நடுவில் செக்ஸ் வைத்துக் கொள்ளும் காட்சியும் படத்தில் உண்டு. தமிழ் டப்பிங்கில் இது இடம்பெறுமா என்பது இங்குள்ளவர்களின் அதிர்ஷ்டத்தை பொறுத்தது.