சினிமா விருதுகளை தேர்வு செய்ய குழு: கருணாநிதி அறிவிப்பு
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:49 IST)
தமிழக அரசின் சினிமா விருதுகளை தேர்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவினை முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2007- 2008ம் ஆண்டுகளுக்குரிய தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளையும்; 2006-2007, 2007-2008ம் ஆண்டுகளுக்குரிய தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி தொழில்நுட்பப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகளையும் தேர்வு செய்ய தேர்வுக்குழு ஒன்றை அமைத்து முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தேர்வுக் குழுவின் தலைவராக இருப்பார். திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சான், திரைப்பட நடிகர்கள் வாகை சந்திரசேகர், சாருஹாசன், திரைப்பட இயக்குநர் பி.அமிர்தம், திரைப்பட நடிகை குஷ்பு, திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் அறிவுமதி, சென்னை தொலைக்காட்சி முன்னாள் இயக்குநர் நடராஜன், இசை அமைப்பாளர் தேவா, திரைப்பட நடிகர்கள் ஒய்.ஜி.மகேந்திரன், குமரிமுத்து, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், எம்.ஜி.ஆர். திரைப்பட, தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஆகியோர் தேர்வுக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.