மினிமம் பட்ஜெட் படம் என்றால் உள்ளூரில் உள்ள திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்திக்கலாம். வாரணம் ஆயிரம் மெகா பட்ஜெட்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற ப்ரூக்ளின் பல்கலைக்கழகத்தில் சில காட்சிகளை வேறு எடுத்திருக்கிறார்கள். ரசிகர்களை சந்திக்க அமெரிக்கா செல்வதுதானே சரி. மனைவி, குழந்தை சகிதம் சில நாட்களுக்குமுன் அமெரிக்கா சென்றார் சூர்யா.
அமெரிக்காவில் வாரணம் ஆயிரம் படத்தை வெளியிட்டிருக்கும் பரத் கிரியேஷன்ஸ் சூர்யா, ரசிகர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
வாரணம் ஆயிரம் ஓடும் திரையரங்குக்கு சென்ற சூர்யாவுக்கு டன் கணக்கில் ஆச்சரியம். விசிலடித்து சூர்யாவை வரவேற்ற சாஃபட்வேர் இன்ஜினியர்கள் சைதாப்பேட்டையில் இருக்கும் எபெஃக்டை உருவாக்கியிருக்கிறார்கள்.
வாரணம் ஆயிரம் தெலுங்கில் சூர்யா சன் ஆஃப் கிருஷ்ணன் என்ற பெயரில் வெளியாகியிருப்பதால் தெலுங்கு பேசும் ரசிகர்களும் சூர்யாவை சூழ்ந்து கொண்டு பாராட்டியிருக்கிறார்கள்.
இனி ஒவ்வொரு படத்தின் போதும் அமெரிக்கா செல்லலாமா என்று சூர்யா யோசிக்கும் அளவுக்கு வரவேற்பு பலமாம்.