திருச்சி, கோவை, வட ஆற்காடு மாவட்ட திரையரங்கு உரிமையாளர்களுக்கு தரவேண்டிய 54 லட்சம் நஷ்டஈடு கிடைக்காததால், கவிதாலயா மற்றும் பிரமிட் சாய்மீரா நிறுவனங்களின் படங்களை திரையிடுவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது.
இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் பிரமிட் சாய்மீரா, குறிப்பிட்ட மாவட்டங்களில் குசேலனை நேரடியாக திரையரங்குகளுக்கு வழங்கவில்லை. விநியோகஸ்தர்கள் மூலமாகவே வழங்கப்பட்டது. அதனால் நஷ்டஈடை விநியோகஸ்தர்களிடமே தரமுடியும் என தெளிவுபடுத்தியுள்ளது.
அத்துடன், திரையரங்கு உரிமையாளர்களின் அறிக்கையில் கோபமான பிரமிட் சாய்மீரா தலைவர் சாமிநாதன், மீதமுள்ள நஷ்டஈடு தொகையை தயாரிப்பாளர்களிடம் திருப்பித்தர முடிவு செய்துள்ளார். இனி இதுபோல் அறிக்கை வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை உறுதி என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார் அவர்.
தமிழகம் முழுவதும் பிரமிட் சாய்மீரா வசம் நூற்றுக்கும் அதிகமான திரையரங்குகள் உள்ளன. அதனால், திரையரங்கு உரிமையாளர்களால் பிரமிட் சாய்மீராவை முழுமையாக கட்டுப்படுத்த இயலாது.
சாமிநாதனின் எச்சரிக்கையைத் தொடர்ந்து தங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்.