தமிழ் கற்கும் தமிழ் நடிகர்!

வியாழன், 12 ஜூன் 2008 (20:21 IST)
வட இந்தியாவிலிருந்து வரும் கதாநாயகிகள் ஆள் வைத்து தமிழ் படிப்பதுண்டு. தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டில் வளர்ந்த நடிகர் தமிழுக்கு டியூசன் போகிறாரென்றால்...?

அந்த அதிசயம் நடப்பது வால்மீகி படத்தில். இதில் கல்லூரியில் நடித்த அகில் கதாநாயகன். வடசென்னை கதையின் பின்புலம். பாண்டி எனும் பொறுக்கி வேடம் அகிலுக்கு.

அகிலுக்கு தெரிந்தது நல்ல தமிழ். படத்துக்கு தேவை வடசென்னையில் புழங்கும் சென்னை தமிழ். சாதாரண வாய்க்குள் நுழைகிற மொழியா சென்னை தமிழ்?

ஆள் வைத்து அகில் இப்போது சென்னை தமிழ் கற்று வருகிறார். இது ஒருபுறமிருக்க, மீரா நந்தன், ஸ்ருதி நாயர் என்ற இரு மலையாள புதுமுகங்கள் வால்மீகியில் நடிக்கிறார்கள்.

தமிழே தெரியாத இவர்கள் ஜாலியாக படப்பிடிப்புக்கு வந்து செல்கிறார்கள். டப்பிங் பேசப்போவது வேறு யாரோ என்பதால் அகில் மாதிரி மொழி பிரச்சனையெல்லாம் இவர்களுக்கு இல்லை.

சினிமாவில் அதிகம் தெரியாமல் இருப்பதுதான் முதல் தகுதி!

வெப்துனியாவைப் படிக்கவும்