களம் மாறி ஆடியதால் மனசெல்லாம் காயம், மத்திய அமைச்சர் அன்புமணிக்கு! தென்னிந்தியாவில் புகைந்த சிகரெட் விவகாரம், வட இந்தியாவில் இப்படி சுடும் என்று யார் கண்டது?
சினிமாவில் சிகரெட் பிடிக்கக் கூடாது என்று அன்புமணி கூறியதும், அவசரமாக சிகரெட் ஸ்டைலையே நிறுத்திக் கொண்டார் ரஜினி. அவரைத் தொடர்ந்து விஜயும் சிகரெட்டுக்கு சினிமாவில் விடைகொடுக்க, வெற்றி உற்சாகத்துடன் இந்தி சினிமாவுக்கும் சிகரெட்டை கைவிடும்படி அழைப்பு விடுத்தார்.
ஹாலிவுட்டை நோக்கி ஏவுகணை பாய்ச்சலில் சென்றுக் கொண்டிருக்கும் பாலிவுட்டுக்கு அமைச்சரின் வேண்டுகோள் எட்டிக்காய். அதெல்லாம் முடியாது என ஷாருக் கான் முதல் அமிதாப் பச்சன் வரை மறுத்ததோடு, அன்புமணி முதலில் தனது அதிகாரிகளுக்கு இதை அறிவுறுத்தட்டும் என அட்வைஸும் செய்தனர்.
நொந்து போனவர், ரஜினி கடந்த இரு படங்களில் சிகரெட் புகைப்பது போல் நடிக்கவில்லை. ரஜினியால் முடியுமென்றால் ஏன் உங்களால் முடியாது என்று வடக்கே வேகாத பருப்புக்கு தென்னிந்திய நெருப்பை துணைக்கழைத்துள்ளார். ஆனால் இதற்கெல்லாம் பாலிவுட் செவிசாய்க்கும் என்று தெரியவில்லை. அதன் கலாச்சார, சமூக அக்கறை காதுகள் என்றோ டமாரமாகிவிட்டன.