'தசாவதாரம்' படம் குறித்து நீதிமன்றத்தின் நோட்டீசுக்கு விளக்கம் அளித்துள்ளது தணிக்கைக் குழு.
'தசாவதாரம்' படத்தில் வைணவர்களை இழிவுப்படுத்தியிருப்பதாகக் கூறி, குறிப்பிட்ட காட்சியை நீக்கவும், படத்துக்கு தடை கோரியும் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சர்வதேச வைஷ்ணவ தர்ம சம்ரக்சணா அமைப்பின் தலைவர் கோவிந்த ராமானுஜ தாசா இந்த வழக்கை தொடர்ந்தார்.
அவரது புகாரை விசாரித்த நீதிமன்றம் விளக்கம் கேட்டு படத்தின் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும், தணிக்கைக் குழுவிற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
அதன்படி விளக்கமளித்துள்ள தணிக்கைக் குழு, படத்தில் வைஷ்ணவர்களை தவறாக சித்தரிக்கும் எந்தக் காட்சியும் இல்லை, வைணவர்களுக்காக போராடும் ராமானுஜர் என்ற வேடத்தில்தான் கமல் நடித்துள்ளார். சைவ, வைணவ மோதலோ, ரங்கநாதர் சிலையை கடலில் வீசும் காட்சியோ, பகவத் கீதையை காலில் மிதிக்கும் சீனோ படத்தில் இல்லை என தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
விளக்கம் அளிக்க தயாரிப்பாளர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டுள்ளதால் வழக்கு விசாரணை 20 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.