திங்கள், 31 மார்ச் 2008 (17:40 IST)
காய்கறிக் கடை என்றாலும், காயலான் கடை என்றாலும் விடாது கறுப்பாய் தனது வணிக ஆதிக்கத்தைச் செலுத்துவதில் கவனங்காட்டும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பட வினியோகத்திலும் அடியெடுத்து வைத்துள்ளது.
அட்லாப்ஸ் நிறுவனம் வாயிலாக 'நேபாளி' படத்தின் சென்னை புறநகர் பகுதி வினியோக உரிமையையும், மதுரை ஏரியாவையும் ஒரு சில கோடிகளைக் கொடுத்துக் கபளீகரம் செய்துள்ளது.
ஏற்கெனவே காய்கறி கடை வியாபாரத்தில் கண்டனக் குரல்களுக்கு ஆளான ரிலையன்சிற்கு தமிழ்ப்பட உலகில் பட்டுக்கம்பள வரவேற்பா! எதிர்ப்பு கோஷமா? என்பது போகப் போகத்தான் தெரியும்.
இதுதவிர ரிலையன்ஸ் நாடு முழுவதும் 20 சேனல்களைத் துவக்கத் திட்டமிட்டு அரசு அனுமதிக்காகக் காத்திருக்கிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் 'நீங்கள் ரசித்துக் கொண்டிருப்பது ரிலையன்ஸ் தொலைக்காட்சி' என்ற குரல் நம்மைப் பின்தொடர வாய்ப்புள்ளது.