தமிழ்ப் பெயருக்கு வரிச்சலுகை : அரசு கட்டுப்பாடு!

புதன், 5 மார்ச் 2008 (20:22 IST)
தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு முழு வரிச்சலுகை என தமிழக அரசு அறிவித்து அதனை நடைமுறைப்பபடுத்தியும் வருகிறது, இந்த அறிவிப்பால் ஜில்லுனு ஒரு காதல், சில்லுனு ஒரு காதல் என்றும், உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங், உனக்கும் எனக்கும் என்றும் பெயர் மாறியது தெரியும்.

இந்த வரிச்சலுகையை சிலர் தவறாகப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக கெட்டவன், பொறுக்கி என்றெல்லாம் பெயர் வைப்பதாக தமிழ் ஆர்வலர்கள் குறைபட்டுக் கொண்டனர். இதனையடுத்து தயாரிப்பாளர்கள் எடுத்த நடவடிக்கையால் பொறுக்கி படத்தின் பெயர் சண்ட என்று மாறியது.

இன்னும் சிலர், மராட்டிய, ஆங்கில பெயர்களைச் சூட்டி, இது பெயர்ச்சொல், தமிழில் இதை மாற்ற முடியாது என்று கூறி வரிச்சலுகை பெற்றனர். உதாரணம் சிவாஜி! இதுவொரு மராட்டிய பெயர்.

இன்னும் சிலர் வட்டார வழக்கை தலைப்புகளாகச் சூட்டத் தொடங்கினர். ரெண்டு என்ற சுந்தர் சி-யின் படம் இதற்கு உதாரணம்.

இப்படி தமிழக அரசின் வரிச்சலுகை நோக்கத்தை பலரும் தவறாகப் பயன்படுத்துவதால் அரசு அதிரடி கட்டுப்பாடு ஒன்றை அறிவித்துள்ளது.

இதன்படி தமிழுக்கு சிறிதும் பொருந்தி வராத வகையில் பெயர் சூட்டப்பட்டு எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு கண்டிப்பாக வரிச்சலுகை அளிக்கப்பட மாட்டாது என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு திட்டவட்டமாக கூறுகிறது.

தமிழில் பெயர் வைத்து, கீழே ஆங்கிலத்தில் சப்-டைட்டில் வைப்பதற்கும் கட்டுப்பாடு விதித்தால் தமிழக அரசின் எண்ணம் முழுமை பெறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்