'திமிரு' படத்தில் ஹைடெசிபல் குரலும், ஆயிரம் வாட்ஸ் பவருமாக, மாமா என்னை கல்யாணம் பண்ணிக்க மாமா என்று விஷாலை துரத்திய ஸ்ரேயா ரெட்டிக்கு திருமணம். மணமகன் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா. இதுவொரு காதல் திருமணம்.
பிரபல விஜேயாக இருந்த ஸ்ரேயா ரெட்டி, மலையாளத்தில் மம்முட்டியின் 'பிளாக்' படத்தில் தமிழ் தேபசும் பெண்ணாக நடித்தார். பிறகு 'வெயில்', 'திமிரு' என்று சில தமிழ்ப் படங்கள். இதில் திமிரு படத்தை தயாரித்தவர் விஷாலின் அண்ணனான விக்ரம் கிருஷ்ணா. இவர் வேறு யாருமல்ல, அஜய் என்ற பெயரில் பூப்பறிக்க வருகிறோம் படத்தில் ஹீரோவாக நடித்தவர்தான். நடிப்பு கைகொடுக்காமல், இப்போது தம்பி விஷாலின் படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
திமிரு படப்பிடிப்பின் போது ஸ்ரேயா ரெட்டிக்கும், விக்ரம் கிருஷ்ணாவுக்கும் காதல் பற்றிக் கொண்டது. இரு வீட்டார் சம்மதத்துடன் சென்ற வருடம் செப்டம்பர் 7 ஆம் தேதி இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த மாதம் 9 ஆம் தேதி இருவருக்கும் திருமணம்.
சென்னை பார்க் ஷெரட்டனில் நடக்கயிருக்கும் திருமணத்தில் தமிழக மற்றும் ஆந்திர முதல்வர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.