இயக்குனர் முருகதாஸை யாரும் கடத்தவில்லை, கைதும் செய்யவில்லை, சம்மன் கொடுப்பதற்காக போலீஸார்தான் அழைத்துச் சென்றனர் என சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் சிவானந்தம் கூறினார்.
எழுத்தாளர் சுஜாதாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த முருகதாஸை சிலர் பலவந்தமாக காரில் அழைத்துச் சென்றனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
முருகதாஸை சேலம் போலீஸார்தான் அழைத்துச் சென்றனர் என்பது பிறகு தெரிய வந்தது. ஆனாலும், அதற்கான காரணம் மர்மமாகவே இருந்தது.
கஜினி படத் தயாரிப்பாளர் சந்திரசேகர், முருகதாஸ் தன்னை ஆள்வைத்து மிரட்டுவதாக சேலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கை எதிர்த்து சென்னை நீதிமன்றத்தில் மனு கொடுத்தார் முருகதாஸ். அதனை விசாரித்த நீதிபதி, முருகதாஸ் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பு வெளிவந்த சில நாட்களிலேயே முருகதாஸ் பலவந்தமாக போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டதால், அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். நாம் விசாரித்ததில் சந்திரசேகர், முருகதாஸ் மீது மேலும் ஒரு வழக்கு தொடர்ந்தது தெரியவந்தது.
கஜினி படம் தொடர்பான அனைத்து உரிமைகளும் தன்னிடம் இருப்பதாகவும், இயக்குனர் முருகதாஸ¤ம் படத் தயாரிப்பு நிறுவன பங்குதாரர்கள் கீதா ஆர்ட்ஸ் சம்பத்குமார், மது ஆகியோரும் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி, கஜினியை இந்தியில் ரீ-மேக் செய்து வருவதாகவும், இதனால் 4 கோடி ரூபாய் வரை நஷ்டமென்றும், தன்னை ஏமாற்றிய முருகதாஸ், சம்பத்குமார், மது ஆகியோர் மீது நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சந்திரசேகர் சேலம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக முருகதாஸை விசாரிக்கவும், அவரிடம் சம்மன் கொடுக்கவுமே போலீஸார் அவரை அழைத்துச் சென்றனர் என்றார் உதவி ஆணையர் சிவானந்தம்.
பொது இடத்தில், அதுவும் பிரபல எழுத்தாளர் ஒருவரின் இறுதிச் சடங்களில் அனைவருக்கும் தெரிந்த ஒரு இயக்குனரை போலீஸார் பலவந்தமாக அழைத்துச் சென்றது அனைத்து தரப்பினரிடமும் அதிருப்தியை கிளப்பியிருக்கிறது.