நடிப்பு என் ரத்தத்தில் இருக்கு - சின்ன சிவாஜி!
செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (19:28 IST)
சத்யம் திரை வளாகத்தில் நடந்த சிங்கக்குட்டி இசை வெளியீட்டு விழாவில், 'நடிப்பு என் ரத்தத்தில் கலந்திருக்கு' என்றார் சிவாஜி கணேசனின் பேரனான சின்ன சிவாஜி.
விழாவில் மனோரமா, கே.எஸ்.ரவிக்குமார், நடிகைகள் குஷ்பு, சங்கீதா, கெளரி, முன்ஜால், நடிகர்கள் ராதாரவி, சிம்பு, தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிவாஜியை வாழ்த்திப் பேசினர்.
கே.எஸ்.ரவிக்குமாரின் வாழ்த்துப் பேச்சில் உயர்வு நவிற்சி விளையாடியது. 'சிங்கக்குட்டி படத்தில் சிவாஜியைப் பார்ப்பது, சிவாஜி கணேசனை பராசக்தியில் பார்ப்பது போல் இருக்கு' என்றார்.
ரதாரவிக்கு கமல் மீது என்ன கோபமோ! சம்பந்தமில்லாமல், 'கேமரா முன் அவர் நல்லா நடிப்பார். ஆனால், கேமராவுக்கு வெளியே நல்ல ஆள் கிடையாது' என்று சொல்ல, கூட்டத்தில் சலசலப்பு. அருகில் இருந்தவர்கள் ராதாரவிக்கு அறிவுரை சொல்ல, மீண்டும் சம்பந்தமில்லாத பேச்சுடன் தனது உரையைத் தொடர்ந்தவர், "ஒரு படம் நடித்ததும், ஒரு கோடி சம்பளமெல்லாம் கேட்காதீங்க. தயாரிப்பாளர் கஷ்டப்படுவார்" என்று சிவாஜிக்கு அறிவுரை கூறினார்.
படத்தின் இசையமைப்பாளர் பிரசன்ன சேகர், ராம்கோபால் வர்மா படங்களுக்கு இசையமைப்பவர். தஞ்சாவூர்காரர் என்ற போதிலும் தமிழ் தடுமாறியது. நன்றி வணக்கம் சொல்வதற்குள் வியர்த்து விறுவிறுத்துப் போனார்.
விழாவில், படத்திலிருந்து இரண்டு பாடல்களை ஒளிபரப்பினார்கள். படத்தைப் பற்றி நல்ல அபிப்ராயத்தை உருவாக்கும் விதமாக நன்றாகவே இருந்தன பாடல்கள்.
படத்தின் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் பேசும்போது, 'புது ஆட்களை வைத்துப் படம் எடுக்கிறோம். படம் எப்படி வருமோ என்று பயம் இருந்தது. முதல் ஷெட்யூல்ட் முடித்த பிறகு அந்தப் பயம்போய் நம்பிக்கை வந்தது' என்றார்.
சிவாஜியின் பேச்சிலும் அதே நம்பிக்கையைக் காண முடிந்தது.