முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே கிடைக்கும் 'கிராண்ட் ஓபனிங்' வடிவேலின் 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' படத்துக்கும் கிடைத்திருக்கிறது. சென்னை நகரத்தில் நேற்று வெளியான இப்படம் நூறு சதவீத வசூலைப் பெற்று சாதனைப் படைத்திருக்கிறது.
வடிவேல் கதாநாயகனாக நடித்த 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' வெற்றி பெற்றதால், 'இந்திரலோகத்தில்...' படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
சென்னை நகரில் மட்டும் 13 திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது. மல்டிப்ளெக்ஸ் திரையரங்கில் 10 காட்சிகள் வரை திரைரியடுகிறார்கள். அப்படி இருந்தும் நேற்று அனைத்து திரையரங்குகளும் நிரம்பி வழிந்தன.
இந்த வருடம் வெளிவந்த படங்களில் 'பீமா'வுக்கு அடுத்து மிகப்பெரிய 'ஓபனிங்' வடிவேலின் படத்திற்குதான் என்றார் விநியோகஸ்தர் ஒருவர். இப்படம் ஏறக்குறைய 12 கோடிக்கு விலைபோனதாகக் கூறப்படுகிறது.
படத்தில் காமெடிக்கு பஞ்சமில்லை என்றாலும், ஜவ்வாக நகரும் பல காட்சிகளால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். வரும் நாட்களில் அழகப்பன் ஆதரவை தக்கவைத்துக் கொள்வானா என்பது தயாரிப்பாளரின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது!