1950 முதல் அவரது பட நிறுவனம் தீவிரமாக படங்களைத் தயாரித்தது. காலத்தால் அழியாத வெற்றிப் படங்களான ஸ்ரீமதி 420, சந்திரகாந்த், லைட் ஹவுஸ், பாய் பேகான், அந்தாஸ் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடந்த 1972 ஆம் ஆண்டில் சிப்பி தனது மகன் இரமேஷ்வுடன் இணைந்து எடுத்த சீத்தா அவுர் கீத்தாவில் நடிகை ஹேமாமாலினி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் தர்மேந்திரா, சஞ்சீவ் குமார் ஆகியோரும் நடித்தனர்.
1975-ல் அமிதாப்பச்சன், தர்மேந்திரா, சஞ்சீவ் குமார், அம்தஜ்கான், ஹேமாமாலினி ஆகியோரரை வைத்து இவர் எடுத்த `ஷோலே' படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. முதலில் தயாரித்த படம் சாஜா 1951-ல் வெளியானது.
கமலின் இந்திப்படமான சாகரை 1985-ல் தயாரித்தார். சீதா அவுர் கீதா, ஷான் போன்றவைகளும் இவர் தயாரித்த முக்கிய படங்கள். 1992- ல் ராஜீ பான்கையா, ஜென்டில்மேன், ஆதிஸ், 1995 -ல் ஜவானா திவானா ஆகிய திரைப்படங்களும் முக்கியமானவை. கடைசியாக சயீஃப் அலி கான் நடித்த ஹமேஷா என்ற படத்தை தயாரித்தார். 1997-ல் இப்படம் வெளியானது. இந்திப்பட உலகில் முன்னணி தயாரிப்பாளராக விளங்கினார்.
93 வயதான ஜி.பி.சிப்பிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த 9 மாதங்களாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி மரணம் அடைந்தார். ஜி.பி.சிப்பி பலமுறை இந்தி தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.